இந்தியா

ரூ.6 லட்சம் பைக் திருடியதாக ஐஐடி பட்டதாரி கைது

பிடிஐ

ஹைதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஷோரூம் ஒன்றில் கடந்த 1-ம் தேதி இளைஞர் ஒருவர், ‘ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750’ மாடல் மோட்டார் சைக்கிளை ‘டெஸ்ட் டிரைவ்’ செய்துள்ளார். இந்நிலையில் ஷோரூம் ஊழியர் ஒருவர் அவரை பின்தொடர்ந்த போதும், அவரை ஏமாற்றிவிட்டு வேறு பாதையில் தப்பிச் சென்றுவிட்டார்.

தாஹிர் அலி என்ற பெயரில் அந்த இளைஞர் கொடுத்திருந்த தொலைபேசி எண், இமெயில் முகவரி ஆகியவை போலியானவை என பின்னர் தெரியவந்தது.

இந்நிலையில் ஷோரூம் வெளியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் அந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் செல்வதும், ஷோரூம் ஊழியர் அவரை பின் தொடர்வதும் பதிவாகியிருந்தது. இந்தக் காட்சிகளுடன் உள்ளூர் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது.

இந்நிலையில் இந்த இளைஞரை மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரில் கைது செய்த தனிப்படை போலீஸார், அவரை நேற்று முன்தினம் ஹைதராபாத் கொண்டுவந்தனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “இந்த இளைஞர் மும்பை ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணியாற்றும் டி.கிரண் (28). மாதம் ரூ.80 ஆயிரம் சம்பளம் வாங்கும் இவர், சென்னை ஐ.ஐ.டி.யில் முதுகலை பட்டம் பெற்றவர். ரூ.6 லட்சம் விலை கொண்ட இந்த ஆடம்பர பைக்கில் நீண்ட தொலைவு பயணம் செய்வதில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். கடந்த ஆண்டு இந்த பைக்கை அவர் வாங்க முயன்றபோது அவரது குடும்பத்தினர் தடுத்துவிட்டனர்” என்றார்.

SCROLL FOR NEXT