இந்தியா

மேற்கு வங்கம்: 8 ஆம் வகுப்பு தகுதிக்கான வன உதவியாளர் பணிக்கு பி.எச்டி மாணவர்கள் விண்ணப்பம் 

பிடிஐ

மேற்கு வங்கத்தில் 8 ஆம் வகுப்புத் தேர்ச்சியை தகுதியாகக் கொண்ட வன உதவியாளர்கள் பணிக்கு பொறியியல், முதுகலை, பி.எச்.டி ஆராய்ச்சி முடித்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக மூத்த வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும் மனித-விலங்கு மோதலைத் தடுப்பதற்கும் ஒப்பந்த அடிப்படையில் வன உதவியாளர்கள் 2000 பேரைப் பணியமர்த்த மேற்கு வங்க அரசு முடிவு செய்தது. மாநிலத்தில் இதற்கான அறிவிப்பு வெளியான உடனே ஏராளமான விண்ணப்பங்கள் குவியத் தொடங்கின. இவற்றில் பெரும்பாலும் உயர்கல்வி படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மால்டா வனப் பிரிவின் சரக அதிகாரி சுபீர் குமார் குஹா நியோகி கூறுகையில், "உயர் கல்வி கற்ற விண்ணப்பதாரர்கள் பலர் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர். உங்கள் தகுதிக்கு இந்த வேலை தேவையா என நாங்கள் கேட்டபோது, இதனால் தங்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை என்று எங்களிடம் கூறினர். ஆட்சேர்ப்பு ஒப்பந்தப் பணிக்கு வந்தவர்களில் பிஎச்டி முடித்தவர்கள் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் அதிகம் உள்ளனர்'' என்றார்.

இந்தப் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் ஒருவரான வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்ற சுதீப் மொய்த்ரா கூறுகையில், ''ஒப்பந்தப் பணியாக இருந்தாலும் மிகக் குறைந்த தகுதிக்கான வேலை என்றாலும் இது அரசாங்க வேலை. தற்போதைய சூழ்நிலையில் கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த அரசு வேலையை நான் விரும்புகிறேன்.

இன்றைய நிலையில் வேலைவாய்ப்பு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கோவிட் -19 தொற்றுநோயால் பல மக்கள் வேலை இழந்துள்ளனர், நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. தனியார் துறைகளும் முடங்கியுள்ளன. வனத்துறையின் ஆட்சேர்ப்பு ஒப்பந்தப் பணி என்றாலும்கூட இதற்கும் மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

முதுகலைப் பொருளாதாரம் படித்த ரக்திம் சந்தா, "எதுவும் செய்யாமல் இருப்பதை விட தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப சில ஆயிரம் ரூபாய்க்கு சம்பளத்துடன் பணிபுரிவது நல்லது" என்றார்.

தடுக்க முடியாது

உயர்கல்வி மாணவர்கள் மிகவும் சாதாரண கல்வித்தகுதியுள்ள பணிக்கு விண்ணப்பித்துள்ளது குறித்து கொல்கத்தாவின் மூத்த வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "பி.எச்.டி. ஆராய்ச்சியாளர்கள் போன்ற உயர் தகுதி வாய்ந்த மாணவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்தால் நாங்கள் என்ன செய்ய முடியும். இது அவர்களின் கல்விச் சான்றுகளுக்கு மிகவும் கீழே உள்ளது. அவர்களை நாங்கள் தடுக்க முடியாது" என்றார்.

மதிப்பெண்கள்

பணிக்கு விண்ணப்பித்தவர்கள், வாசிப்பறிவு (30 மதிப்பெண்கள்) மற்றும் எழுதுதல் (30) ஆகிய பிரிவுகளில் பெங்காலி அல்லது மாநிலத்தின் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட எந்த மொழியிலும் சோதிக்கப்படுகிறார்கள்.

இது தவிர, விண்ணப்பதாரர்களிடம் ஆங்கிலம் அல்லது இந்தி (10 மதிப்பெண்கள்), பொது அறிவு (20), மற்றும் வனவியல் பணிகளுக்கான உடல் தகுதி (10) ஆகிய திறன்களும் ஆராயப்படுகின்றன.

SCROLL FOR NEXT