பெங்களூருவின் புறநகரான ஹோஸ்கோட் நகரில் பிரியாணி வாங்குவதற்காக மக்கள் அதிகாலை 4.30 மணி முதல் சாலையில் காத்திருந்தனர். இதனால் சாலையில் 1.5 கி.மீ தொலைவுக்கு மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
பெங்களூருவிலிருந்து 25 கி.மீ. தொலைவில் இருப்பது ஹோஸ்கேட் நகரம். இங்குள்ள ஆனந்த் தம் கடையில் தயாரிக்கப்படும் பிரியாணி அப்பகுதி வட்டாரத்தில் மிகவும் சுவையானது என்பதால் பெரும் கூட்டம் கூடும். 22 ஆண்டுகள் பழமையான மிகவும் புகழ்பெற்ற பிரியாணி கடை என்பதால், மக்கள் கூட்டத்தைச் சமாளிக்க வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான கிலோ அளவில் பிரியாணி தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.
அதிகாலையில் தொடங்கும் பிரியாணி விற்பனை சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான கிலோ மட்டன் பிரியாணி விற்றுத் தீர்ந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது. இதனால் இந்தக் கடையின் பிரியாணியை வாங்குவதற்கு மக்கள் மத்தியில் வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும்.
இன்று வார விடுமுறை நாள் என்பதால், பிரியாணி வாங்குவதற்காக அதிகாலை முதலே இந்தக் கடை முன் மக்கள் கூடத் தொடங்கிவிட்டனர். மக்கள் வரிசையாக முகக்கவசத்துடன் பிரியாணி வாங்குவதற்காக நிற்கத் தொடங்கினர். சிலர் இரவே காரில் இப்பகுதிக்கு வந்து காரை நிறுத்திக் காத்திருந்து அதிகாலை வந்ததும் வரிசையில் நின்று பிரியாணி வாங்கி சாப்பிட்டுச் சென்றனர்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர்கள் தரப்பில் கூறுகையில், “22 ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறோம். நாள்தோறும் ஆயிரக்கணக்கான கிலோ அளவில் பிரியாணி செய்து விற்பனை செய்கிறோம். வார இறுதி நாட்களில், விடுமுறைகளில் இது இன்னும் அதிகரிக்கும். எங்கள் கடையில் செயற்கையான பொருட்கள், சுவைக்கு ரசாயனப் பொருட்கள் சேர்க்காமல் பிரியாணி செய்வதால் மக்கள் விரும்புகிறார்கள். கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின் பிரியாணியின் விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது” எனத் தெரிவிக்கின்றனர்.
கடையில் நின்றிருந்த வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், “நான் அதிகாலை 4 மணிக்கே பிரியாணி வாங்க வந்துவிட்டேன். ஆனால், 6 மணி ஆகியும் இன்னும் கூட்டம் நகரவில்லை. இந்தக் கடையின் பிரியாணி மிகவும் சுவையானது என்பதால், எவ்வளவு நேரமானாலும் வாங்கிட வேண்டும் என்று நிற்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இன்று அதிகாலை முதல் மக்கள் பிரியாணி வாங்குவதற்காக 1.5 கி.மீ. தொலைவுக்கும் அதிகமான வரிசையில் நின்றிருந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.