ஐபிஎஸ் அதிகாரி முனிராஜ். 
இந்தியா

பட்டாசுத் தொகை பாக்கிக்காக உ.பி.யின் அலிகர் போலீஸாரிடம் சிவகாசி வியாபாரி புகார்: தொகையை வசூல்செய்து பாராட்டு பெற்ற தமிழரான ஐபிஎஸ் அதிகாரி 

ஆர்.ஷபிமுன்னா

உத்தரப் பிரதேசம் அலிகரில் தீபாவளி பட்டாசுகளுக்கான பாக்கித் தொகை வராததால் போலீஸாரிடம் சிவகாசி வியாபாரி புகார் செய்திருந்தார். இதை அம்மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரான தமிழர் ஜி.முனிராஜ் ஐபிஎஸ் வசூலித்துக் கொடுத்துப் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

தீபாவளி, திருமணம் உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்காக உ.பி.க்கு தமிழகத்தின் சிவகாசியில் இருந்து பட்டாசு அனுப்பப்படுகிறது. இதை வாங்கும் வியாபாரிகளில் சிலர் சிவகாசி நிறுவனங்களுக்கு அதன் தொகையை அனுப்பாமல் ஏமாற்றுவது உண்டு.

இந்தவகையில், சிவகாசியின் சிறு, குறு மற்றும் நடுத்தரப் பிரிவு நிறுவனமும் உ.பி.யின் அலிகருக்கு பட்டாசுகளைக் கடந்த 2 வருடங்களாக அனுப்புகிறது. இதில் ரூ.69,000 மதிப்புள்ள பட்டாசுகளைப் பெற்ற அலிகரின் வைஷாலி நிறுவனத்தின் ஜிதேந்தர் குமார் பணத்தை அனுப்பாமல் ஏமாற்ற முயன்றார்.

இதனால், தன்னை ஏமாற்றும் நிறுவனத்தின் மீது காவல்துறையில் புகார் அளிக்க சிவகாசி நிறுவனத்தின் உரிமையாளரான 'ஒரு சொல்' காந்தீஸ்வரன் முடிவு செய்தார். உ.பி. காவல்துறையின் இணையதளத்தில் அலிகர் எஸ்எஸ்பியின் கைப்பேசி எண்ணைக் கண்டெடுத்துப் புகார் அளித்துள்ளார்.

இதன் பலனாக அடுத்த இரு தினங்களில் பட்டாசுக்கான பாக்கித் தொகை முழுவதும் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதனால், பெருமகிழ்ச்சி அடைந்த காந்தீஸ்வரன் அலிகரின் எஸ்எஸ்பியான ஜி.முனிராஜ் ஐபிஎஸ் தமிழரைப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் காந்தீஸ்வரன் தொலைபேசியில் கூறும்போது, ''முதல் முறை அந்த நிறுவனம் உடனடியாகப் பணத்தை அளித்திருந்தது. மறுமுறை பட்டாசு பெற்றவர்கள் ஒன்றரை மாதங்களாக சாக்கு, போக்கு கூறி போன் எடுத்துப் பேசுவதையும் நிறுத்தி விட்டனர்.

நான் தனியாகச் செலவுசெய்து கொண்டு நேரில் செல்லும் தேவையும் இல்லாமல் போனின் புகாரிலேயே எனது தொகை கிடைத்துள்ளது. இதற்காக, ஒரு முயற்சியாக தமிழ் அதிகாரி முனிராஜிடம் அளித்த புகாருக்கு உடனடியாகக் கிடைத்த பலன் நம்ப முடியாததாக உள்ளது. அவருக்கு எனது நன்றிகள்'' எனத் தெரிவித்தார்.

உ.பி. கொள்ளையர்களால் கோவையில் கொள்ளையடிக்கப்பட்ட பல கோடி ரூபாய் நகைகளை முழுவதுமாக மீட்டு அதன் குற்றவாளிகளையும் அதிகாரி முனிராஜ் கைது செய்து உதவியுள்ளார். இங்கு வந்து இன்னல்களுக்கு உள்ளாகி உதவி பெற்ற தமிழக லாரி ஓட்டுநர்களிடமும் 'உ.பி. சிங்கம்' எனும் பெயரில் அதிகாரி முனிராஜ் நன்கு அறிமுகமாகி உள்ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் எஸ்எஸ்பியான முனிராஜ் கூறும்போது, ''பட்டாசு அனுப்பிய ரசீது உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாரித்ததில் அனைத்தும் உண்மை எனத் தெரிந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து வந்த புகார் என்பதால் நானே நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுத்தேன்'' எனத் தெரிவித்தார்.

இதுபோன்ற சிக்கல்களில் உ.பி.யில் திணறும் தமிழர்களுக்கு அம்மாநிலத்தின் தமிழர்களான அதிகாரிகள் மூலம் பல்வேறு வகை உதவிகள் கிடைக்கின்றன. இம்மாநிலத்தின் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மற்றும் ஐஆர்எஸ் அதிகாரிகளாக பல்வேறு முக்கியப் பதவிகளில் சுமார் 20 அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.

இவர்கள் கரோனா ஊரடங்கு காலத்தில் உ.பி.யில் சிக்கிய தமிழர்களுக்கு பல உதவிகள் செய்து மீட்டு தமிழகம் அனுப்பினர். இந்த உதவி செய்வதில் அத்தமிழர் அதிகாரிகளுக்கு இடையே நல்ல ஒருங்கிணைப்பு நிலவுவது பாராட்டத்தக்கது.

SCROLL FOR NEXT