கோப்புப்படம் 
இந்தியா

எல்லையில் வீரர்களுக்கு கவச வாகனம் இல்லை: ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்கிறது சிஆர்பிஎப் 

பிடிஐ

எல்லையில் ராணுவ வீரர்களுக்குக் கவச வாகனம் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து சிஆர்பிஎப் படைப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் 2 நிமிடங்கள் ஓடும் வீடியோவைப் பதிவிட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட விவிஐபிக்களுக்காக வாங்கப்பட்ட விமானம் குறித்து விமர்சித்திருந்தார்.

அந்த வீடியோவில் இரு வீரர்கள் பேசிக்கொண்டிருக்கும் காட்சி இருந்தது. அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவலும் இல்லை.

அதில் இரு வீரர்களும் பேசுகையில், “நம்மை இப்படி குண்டு துளைக்காத வாகனத்தில் அனுப்புகிறார்கள். நாம் செல்லும் இடத்தில் குண்டு துளைக்காத வாகனம் இருந்தாலும் கூட அது நம்மைப் பாதுகாக்கப் போதுமானதாக இருக்காது. நம்முடைய வாழ்க்கை மிகவும் ஆபத்தானது. நம்முடைய வாழ்க்கையையும், குடும்பத்தாரையும் அதிகாரிகள் பணயம் வைக்கிறார்கள்” எனக் கவலையுடன் தெரிவிக்கும் காட்சி இருந்தது.

இந்த வீடியோவைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில், “இது நியாயமா? நம்முடைய எல்லையைக் காக்கும் வீரர்கள் தியாகிகளாக மாறவும், வீர மரணம் எய்தவும், அவர்கள் செல்வதற்கு குண்டு துளைக்காத வாகனங்கள் தரப்படவில்லை. ஆனால், பிரதமர் மோடி பயணிக்க ரூ.8,400 கோடியில் விமானம் வாங்கப்பட்டுள்ளது. இது நியாயமா?’’ என ராகுல் காந்தி கேட்டிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிவிட்ட வீடியோவின் உண்மைத் தன்மை என்ன என்பது குறித்து விசாரணைக்கு சிஆர்பிஎப் உத்தரவி்ட்டுள்ளது.

இதுகுறித்து சிஆர்பிஎப் டிஐஜியும், செய்தித்தொடர்பாளருமான மோஸஸ் தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “ எந்தவிதமான பாதுகாப்புப் பணிகள், தேடுதல் பணிக்குச் சென்றாலும் வீரர்களுக்குப் போதுமான பாதுகாப்பு வசதிகளுடன்தான் அனுப்பப்படுகிறார்கள்.

ராகுல் காந்தி வெளியிட்டிருந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து சிஆர்பிஎப் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 3.25 லட்சம் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். பல்வேறு மாநிலங்களில் நக்சலைட் ஒழிப்புப் பணியிலும் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT