இந்தியா

அம்புடன் இணைந்த வில் சின்னம் கொண்ட சிவசேனா பிஹாரில் போட்டியிடுவதால் ஜேடியு, ஜேஎம்எம் கட்சிகளுக்கு சிக்கல்

ஆர்.ஷபிமுன்னா

மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் கட்சியான சிவசேனா, பிஹாரில் கடந்த 2015 சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக தனித்து போட்டியிட்டது. இதன் சின்னமாக அம்புடன் இணைந்த வில்லும், முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு (ஜேடியு) வெறும் வில் சின்னமும் உள்ளன. ஜேடியு என எண்ணி சிவசேனாவின் அம்புடன் இணைந்த வில் சின்னத்திற்கு பலரும் தவறுதலாக 2015 தேர்தலில் வாக்களித்ததாகக் கருதப்பட்டது. மொத்தம் உள்ள243-ல் 73 தொகுதிகளில் போட்டியிட்டு 2.11 லட்சம் வாக்குகளை சிவசேனா பெற்றிருந்தது. இதேபிரச்சினை பிப்ரவரியில் முடிந்தடெல்லி சட்டப்பேரவை தேர்தலிலும் சிவசேனா மற்றும் ஜேடியுவிற்கு இடையே இருந்தது.

இதேபோல, சிபு சோரண் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் தேர்தல் சின்னமும் வில் அம்பாக உள்ளது. இக்கட்சியின் அம்புடனான வில் பக்கவாட்டிலும், சிவசேனாவின் சின்னத்தில் நேர்வாட்டாகவும் தோற்றமளிக்கின்றன. ஜேடியுவை எதிர்த்து ஜேஎம்எம் பெரும்பாலும் நேரடிப் போட்டியில் இருந்ததில்லை. இதனால், ஜேடியுவிற்கு ஜேஎம்எம் கட்சியின் சின்னத்துடன் வராத சிக்கல் சிவசேனாவுடன் இருந்துள்ளது.

இதன் மீது நிதிஷ் குமார், மத்திய தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகாரினால் கடந்த வருடம் மக்களவைத் தேர்தலில் சிவசேனாவிற்கு வேறு சின்னம் ஒதுக்கப்பட்டது. இதை இந்தமுறை ஏற்க மறுக்கும் சிவசேனா தனது சின்னத்திலேயே போட்டியிட அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளது. பிஹாரில் சுமார்50 தொகுதிகளில் சிவசேனா போட்டியிடுவதால் அக்கட்சியின் சின்னம் மீதான சிக்கல் ஜேடியுவிற்கு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதனால், மத்திய தேர்தல் ஆணையம் தனது, அரசியல் கட்சிகள் சின்னம் 1968 உத்தரவை காட்டி சுயேச்சைகளுக்கான சின்னத்தை சிவசேனாவுக்கு மீண்டும் ஒதுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த குழப்பத்தை தவிர்க்க 2015 தேர்தலுக்கு பின் நிதிஷ் குமார் தங்கள் கட்சி சின்னத்தை மாற்றவும் ஆலோசனை செய்தார். கடந்த 1988-ம் ஆண்டில் பல கட்சிகள் இணைந்து உருவாக்கிய ஜனதாவின் சின்னமாக சக்கரம் இருந்தது. தற்போது ஜனதா உடைந்து விட்டதால் அதன் சக்கரம் சின்னம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை தமதுகட்சியின் சின்னமாக கேட்கும்படியும் ஐக்கிய ஜனதா தளத்தினர் நிதிஷ் குமாருக்கு யோசனை அளித்திருந்தனர். இதற்காக அவர் அதன் கடைசி தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவிற்கு எழுதிய கடிதத்திற்கு பலன் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT