மத்திய அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி: கோப்புப்படம் 
இந்தியா

பிரதமர் மோடி, அமித் ஷா பாஜக தலைமை அலுவலகம் வருகை: பிஹார் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

செய்திப்பிரிவு

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் பாஜக தலைமை அலுவலகத்துக்கு இன்று மாலை வந்தனர். பிஹாரில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

பிஹாரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 122 தொகுதிகளிலும், பாஜக 121 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விகாசீல் இன்சான் கட்சியை பாஜக இணைத்துக்கொண்டது. இந்தக் கட்சிக்கு பிஹார் தேர்தலில் 11 இடங்கள் தருவதாக ஜேடியு, பாஜக சம்மதித்துள்ளன.

இந்நிலையில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தேர்தல் குறித்த பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்ய ஏற்கெனவே பாஜகவின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் முதல் முறையாகக் கூடி ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் 2-வது முறையாகக் கூடி இன்று ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில்தான் பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்றனர்.

பாஜக, நிதிஷ் கூட்டணியில் இணைந்து இத்தேர்தலைச் சந்திக்கப் போவதில்லை என சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி அறிவித்துவிட்டது. ஆனால், பாஜகவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தமாட்டோம், ஜேடியு கட்சிக்கு எதிராக வேட்பாளர்களைக் களமிறக்குவோம் என எல்ஜேபி தெரிவித்துள்ளது. ஆதலால், தேர்தலில் பாஜக, நிதிஷ் கூட்டணி வெற்றியில் பாதிப்பு வருமா என்பது குறித்தும் பாஜகவின் மத்திய தேர்தல் குழுவில் ஆலோசிக்கப்படலாம்.

தேர்தலில் தீவிரமாகக் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி இந்த வாரத் தொடக்கத்தில் 115 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தது. அதில் தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும் 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT