பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான(என்டிஏ) 20 பிரச்சாரக் கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். இவற்றில் முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சியை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் எதிர்க்கும் தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன.
பிஹாரில் வரும் நவம்பர் 3, 7 தேதிகளில் மூன்று கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் முக்கிய இரு அணிகளான என்டிஏ மற்றும் மெகா கூட்டணியின் தொகுதி பங்கீடுகளும் முடிந்து விட்டன.
இதனால், அங்கு சூடு தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி, என்டிஏவின் 20 கூட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார். இதில் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) தலைவரான முதல்வர் நிதிஷ்குமாருடன் 12 கூட்டங்களில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடியின் கூட்டங்கள் முதல்கட்ட தேர்தல் முடிந்த பின் அக்டோபர் 20 முதல் தொடங்க உள்ளது. இதற்கு முன்பாக என்டிஏவின் தேர்தல் அறிக்கையும் வெளியாகும் எனக் கருதப்படுகிறது.
கடந்த 2015 தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜகவிற்காக பிரதமர் மோடி 31 பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டார்.
2019 மக்களவை தேர்தலில் மீண்டும் என்டிஏவுடன் இணைந்து விட்ட நிதிஷுடன் 10 கூட்டங்களில் பேசி இருந்தார்.
இதன்மூலம், என்டிஏவில் முக்கிய அங்கம் வகிக்கும் பாஜக சார்பில் பிரதமர் மோடியின் புகழ் மீண்டும் முன்னிறுத்தப்படுவதாகக் கருதப்படுகிறது. இத்துடன், மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (எல்ஜேபி) மீது பிரதமரின் நிலைப்பாடு தெளிவாகவும் வாய்ப்புகள் உள்ளன.
மத்தியில் மட்டும் உறுப்பினராக இருந்துகொண்டு பிஹாரில் என்டிஏவிலிருந்து வெளியேறிய மத்திய அமைச்சர்
பாஸ்வானின் எல்ஜேபி) கட்சி, ஜேடியுவை எதிர்த்து சுமார் 145 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பிரதமர் மோடியின் பெயரை தனது பிரச்சாரங்களில் பயன்படுத்தக் கூடாது என பாஜக சார்பில் ஏற்கனவே எல்ஜேபிக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், எல்ஜேபி போட்டியிடும் தொகுதிகளிலும் பிரதமர் மோடி ஜேடியு வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
தற்போது எல்ஜேபியின் நிறுவனரான ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவும் நிகழ்ந்துள்ளது. எனவே, தனது பேச்சில் நடுநிலையாகப் பேசுவாரா அல்லது எல்ஜேபிக்கு எதிராகப் பிரதமர் மோடி பேசுவாரா? என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.