பீமா கோரேகான் வன்முறை வழக்கில் சமூக ஆர்வலரும் பாதிரியாருமான ஸ்டான் ஸ்வாமியை தேசியப் புலனாய்வு முகமையினால் கைது செய்யப்பட்டார். 83 வயதில் இவர் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள பீமா கோரேகன் பகுதியில் 2017-ம் ஆண்டு இருசமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை நிகழ்ந்த்து.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. இந்த என்.ஐ.ஏ. ஜார்கண்டின் ராஞ்சியில் உள்ள வீட்டில் மனித உரிமை செயல்பாட்டளரும், பாதிரியாருமான ஸ்டான் ஸ்வாமியைக் கைது செய்தனர்.
இது தொடர்பாக என்.ஐ.ஏ. கூறியதாவது:
ஸ்டான் ஸ்வாமிக்கு தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த அமைப்புடன் சேர்ந்து இவர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இவரை மும்பைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளோம், என்றார்.
ஸ்டான் ஸ்வாமி கைது செய்வதற்கு முன்னால் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, “நான் பீமா கோரேகானுக்குச் சென்றதேயில்லை. என்னை அந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்துள்ளனர். எனக்கு கடும் அழுத்தம் கொடுக்கின்றனர், மும்பை வரச்சொல்லி வற்புறுத்துகின்றனர்.
கரோனா காலத்தில் அங்கு செல்வது நல்லதா?
ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்து கூறும் கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் என பலரும் சிறையில் அடைக்கப்படுவதை தொடர்ந்து பார்க்கிறோம்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த ஸ்டான் ஸ்வாமி சுமார் 50 ஆண்டுகளாக பழங்குடியினருக்காக ஜார்கண்டில் சேவையாற்றி வருகிறார்.
எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான ராமச்சந்திர குஹா, ஸ்டான் ஸ்வாமி பற்றி ஒருமுறை கூறிய போது, ஆதிவாசி உரிமைகளுக்காக ஆயுள் முழுதும் போராடினார் என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் தன் ட்வீட்டில் கூறும்போது, “இதனால் தான் மத்திய அரசு அவரை மவுனமாக்க முடிவெடுத்துள்ளது. சுரங்க நிறுவனங்களின் லாபம்தான் ஆட்சியாளர்களுக்கு முக்கியம் ஆதிவாசிகளின் வாழ்வோ வாழ்வாதாரமோ அல்ல” என்றார்.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தன் ட்விட்டர் பக்கத்தில், “இப்போது அவர் என்.ஐ.ஏ.இனால் யுஏபிஏ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பாஜக அரசு மற்றும் என்.ஐ.ஏ.வும் செய்யும் தவறுகளுக்கு எல்லையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது” என்று ட்விட் செய்துள்ளார்.