அசாம் மாநில அமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று குவாஹாட்டியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நமது நாடு மதச்சார்பற்ற நாடு. நமது அரசும் மதச்சார்பற்ற அரசாக உள்ளது. மதச்சார்பற்ற அரசின் பணத்தில் இருந்து செலவு செய்து மத ரீதியிலான கல்வி நிறுவனங்கள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது. அசாமில் அரசு சார்பில் நடத்தப்படும் மதரசாக்கள் அனைத்தும் மூடப்படும். இது தொடர்பான அரசாணை நவம்பரில் வெளியிடப்படும். தனிப்பட்ட முறையில் இயங்கும் மதரசாக்கள் குறித்து நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான பத்ருதீன் அஜ்மல் கூறும்போது, ‘‘பாஜக தலைமையிலான அரசு மதரசாக்களை மூட முடியாது. அப்படி மூடினால், அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் மதரசாக்களை திறப்போம்’’ என்றார்.