திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் விலையை உயர்த்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “பக்தர்களுக்கு லட்டு பிரசாதத்தை தரமாகவும் குறைந்த விலையிலும் தடையின்றி வழங்கி வருகிறோம். இந்நிலையில் மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால், லட்டு விலையை உயர்த்துவது குறித்து அறங்காவலர் குழு கூட்டத்தில் கலந்தாலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும்” என்றார்.
திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதமும், ஒரு லட்டு ரூ.10 வீதம் 2 லட்டுகளும் வழங்கப்படுகின்றன. மேலும் ரூ.300 செலுத்தி சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இலவசமாக 2 லட்டுகளும் தர்ம தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ரூ.10 வீதம் 2 லட்டுகளும் வழங்கப்படுகின்றன.
மேலும் கூடுதலாக தேவைப்படும் பக்தர்களுக்கு ஒரு லட்டு ரூ.25-க்கு வழங்கப்படுகிறது. தினமும் சராசரியாக 3 லட்சம் லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப் பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் இப்போதைய நிலவரப்படி ஒரு லட்டு தயாரிக்க ரூ.38 செலவாவதால் விலையை உயர்த்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்ட மிட்டுள்ளது.