இந்தியா

பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா மறைவு: கிரிக்கெட் ஆர்வலர்கள், பிரபலங்கள் அஞ்சலி

பிடிஐ

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் ஜக்மோகன் டால்மியா நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 75.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வியாழன் அன்று இரவு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இறந்தார். அவருக்கு வைஷாலி என்ற மகளும், அபிஷேக் என்ற மகனும் உள்ளனர்.

டால்மியா கடந்த 36 வருடங்களாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பல்வேறு உயர் பதவிகளில் இருந்துள்ளார். சர்வதேச கிரிக்ககெட் கவுன்சிலின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம்தான் அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றிருந்தார்.

கடந்த 1983 முதல் அவர் கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளராக இருந்தபோது, 1987 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா நடத்த முக்கியப் பங்காற்றினார்.

அவரது மறைவுக்கு சச்சின் டெண்டுல்கர் உள்பட பல கிரிக்கெட் பிரபலங்களும், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "டால்மியா ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினர் துயரங்களில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT