இந்தியா

சீமாந்திராவில் காங்கிரஸ் பஸ் யாத்திரை: சிரஞ்சீவி

செய்திப்பிரிவு

சீமாந்திரா மாவட்டங்களில் வரும் 21-ம் தேதி முதல் சிரஞ்சீவி தலைமையில் காங்கிரஸ் பஸ் யாத்திரை நடத்தி கட்சி நிர்வாகிகளிடம் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.

இதுகுறித்து ஹைதராபாதில் திங்கள்கிழமை முன்னாள் அமைச் சர் வட்டி வசந்தகுமார் வீட்டில் சீமாந்திரா பகுதி காங்கிரஸ் கட்சித் தலைவர் ரகுவீரா ரெட்டி தலைமையில் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி, முன்னாள் மாநில அமைச்சர்கள் ஆனம் ராம் நாராயண் ரெட்டி, ராமச்சந்திரய்யா, மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பி. சத்ய நாராயணா ஆகியோர் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்துக்குப் பிறகு சிரஞ்சீவி நிருபர்களிடம் கூறியது.

சீமாந்திரா மாவட்டங்களில் வரும் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பஸ் யாத்திரை மேற்கொள்ள உள்ளோம். ஸ்ரீகாகுளம் முதல் அனந்தபூர் வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் மாநில பிரிவினையில் காங்கிரஸ் கட்சி மட்டுமே முடிவு செய்யவில்லை என்பதை பிரசாரம் செய்ய உள்ளோம். மாநிலப் பிரிவினையில் மற்ற கட்சிகள் நாடகமாடுவதை மக்களுக்கு தெரியப்படுத்த உள்ளோம். தினந்தோறும் இரண்டு மாவட்டங்கள் வீதம் கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் பிரசார வியூகம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம்.

இவ்வாறு மத்திய அமைச்சர் சிரஞ்சீவி கூறினார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து் வேறு கட்சிகளுக்கு தேர்தல் பணி செய்யாமல் அறிவுறுத்துவார் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT