ஆசிரியர் தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "ஓர் ஆசிரியராக பணியாற்றுவது மற்ற பணிகளை செய்வது போன்றதல்ல. ஆசிரியர் பணி மிகவும் வித்தியாசமானது. அடுத்த தலைமுறையை உருவாக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன்” என்றார்.
பிரதமர் மேலும் பேசும்போது, "ஓர் ஆசிரியர் எப்போதும் ஓய்வு பெறுவதில்லை. மாணவர்களின் எதிர்காலைத்தை வடிவமைக்கும் மிகப்பெரிய பொறுப்பை தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு பணியாற்றுகிறார்கள் ஆசிரியர்கள்.
அன்னை நம்மை பெற்றெடுக்கிறார் ஆனால் ஆசிரியரே நமக்கு வாழ்வளிக்கிறார்.
ஒரு டாக்டர் அரிய சாதனை செய்தாள் அவரைப் பற்றி அனைத்து ஊடகங்களும் பேசுகின்றன. ஆனால், அந்த டாக்டரின் வெற்றிக்குப் பின்னாள் ஒரு ஆசிரியர் இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஒவ்வொரு டாக்டர், இன்ஜினியர், விஞ்ஞானியின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆசிரியர் இருக்கிறார்" என்றார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஏற்பாட்டில், நாடு முழுவதும் பத்து மாநிலங்களில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாணவர்களுடன் உரையாடியபோது, "ஆசிரியர் தின விழாவின் போது, பள்ளிச் சிறார்களுடன் ஏன் உரையாடுகிறார்கள் என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஏன் என்றால், பள்ளிச் சிறார்கள்தான், ஆசிரியர்களின் அடையாளம். எனவேதான், ஆசிரியர் தினத்தன்று மாணவர்களுடன் உரையாடுகிறேன்" என்றார்.
மேலும், "துரதிருஷ்டவசமாக அரசியல் அவப் பெயரை சம்பாதித்துவிட்டது, திறமை மிக்க நபர்கள், அரசியலுக்கு வந்து, அந்த அவப்பெயரை மாற்ற வேண்டும்" என அழைப்புவிடுத்தார்.
சேவை என்றால் என்ன?
தேசத்துக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பது குறித்து மாணவிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதில் அளித்தார். நெல்லை மாணவி விசாலினி, நான் நாட்டுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். அவ்வாறு சேவை செய்ய எனக்கு வழிகாட்டுங்கள் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "நாட்டுக்கு சேவை ஆற்றுவது என்றால் அரசியல் தலைவராகவோ, முக்கிய நபராகவோ ஆகவேண்டிய அவசியம் இல்லை.
மாணவ, மாணவிகள் சின்ன சின்ன விஷயங்கள் மூலமாகக் கூட நாட்டுக்கு சேவையாற்றலாம். அதாவது, வீட்டில் மின் சிக்கனத்தைக் கடைபிடித்து, ரூ.100 மின் கட்டணத்தை ரூ.50 ஆகக் குறைப்பதே நாட்டுக்கு செய்யும் சேவைதான்" என்று மோடி தெரிவித்தார்.