முறைகேடான வழியில் சுமார் ரூ.61 கோடி ஜிஎஸ்டி வரி திரும்ப பெற்று ஏற்றுமதி நிறுவனங்கள் மோசடி செய்ததை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது.
செயல்படாத அல்லது போலி நிறுவனங்களிடம் இருந்து வாங்காத பொருட்களுக்கு ரசீது பெற்று அதன் மூலம் உள்ளீட்டு வரிப் பணத்தை (ஐடிசி), ஏற்றுமதி நிறுவனங்கள் திரும்ப பெற்று, அரசுக்கு இழப்பீட்டை ஏற்படுத்தியது குறித்து ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (டிஜிஜிஐ) தகவல் திரட்டினர். ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு ஐஜிஎஸ்டி செலுத்த இந்த ஐடிசி பயன்படுத்தப்பட்டு, பின்னர் பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது.
வரி செலுத்தப்படாத பொருட்களுக்கு, ஐடிசி பெற்றதோடு, அதை ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி (ஐஜிஎஸ்டி) செலுத்தவும் பயன்படுத்தப்பட்டு ரீபண்ட் பெறப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு இரட்டை இழப்பு ஏற்பட்டுள்ளது. திரும்ப பெறப்பட்ட ஐஜிஎஸ்டி தொகையின் மதிப்பு சுமார் ரூ.61 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களின் வீடுகளில் டிஜிஜிஐ அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி சோதனை நடத்தினர். இந்த ஏற்றுமதியாளர்களுக்கு சப்ளை நிறுவனங்கள், பொருட்களை வழங்காமல் ரசீதுகளை மட்டுமே வழங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போலி ரசீதுகளுக்கான ஐடிசியை ஏற்றுமதியாளர்கள் பெற்றுள்ளனர் மற்றும் அந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு அரசிடமிருந்து ரீபண்ட் பெற்றுள்னர். இதையடுத்து இந்த ஏற்றுமதி நிறுவனங்களின் உரிமையாளர்களை டிஜிஜிஐ அதிகாரிகள் கடந்த மார்ச் 6ம் தேதி கைது செய்தனர். ஆனால், லூதியானாவைச் சேர்ந்த சப்ளை நிறுவனத்தின் உரிமையாளர் தொடர்ந்து தலைமறைவாக இருந்துள்ளார். அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.
இவர் பொருளாதார குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டவர் என தெரியவந்தது. இதற்கு முன்பு வர்த்தக மோசடி வழக்கில், இவரை காபிபோசா சட்டத்தின் கீழ் வர்த்தக புலுனாய்வுத்துறை கைது செய்துள்ளது.
இவர் சிம்லாவில் உள்ள புகழ்பெற்ற 5 நட்சத்திர விடுதியில் தங்கியிருப்பதாக, கிடைத்த தகவலையடுத்து, அந்த நபரை கடந்த 7ம் தேதி காலை கைது செய்யப்பட்டார். அவரை தில்லி திகார் சிறையில் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக மேலும் விசாரணை நடக்கிறது.