மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல் தெரிவித்துள்ளது.
ராம்விலாஸ் பஸ்வானின் நினைவாக, மத்திய அமைச்சரவை, 2 நிமிடம் மவுனம் அனுசரித்தது. ராம்விலாஸ் பஸ்வானின் இறுதிசடங்கில், அரசு மரியாதை அளிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மத்திய அமைச்சரவை நிறைவேற்றியுள்ள இரங்கல் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
“மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின், மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல் தெரிவிக்கிறது.
அவரது மறைவால், நாடு புகழ்பெற்ற தலைவர், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர், திறமையான நிர்வாகியை இழந்து விட்டது.
பிஹாரின் ககாரியா மாவட்டம், ஷாகர்பானியில் கடந்த 1946ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பிறந்த ராம்விலாஸ் பஸ்வான், அங்குள்ள கோசி கல்லூரி மற்றும் பாட்னா பல்கலைக்கழகத்தில் பயின்று எம்.ஏ மற்றும் எல்.எல்.பி பட்டங்களை பெற்றார்.
பிஹார் மாநிலத்தின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவரான ராம்விலாஸ் பஸ்வான், மக்களின் ஆதரவை பெற்றவர். பிஹார் சட்டப் பேரவைக்கு கடந்த 1969ம் ஆண்டு தேர்ந்வு செய்யப்பட்டார். கடந்த 1977ம் ஆண்டு ஹாஜிபூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 1989ம் ஆண்டு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன்பின் ரயில்வே துறை, தகவல் தொடர்பு துறை உட்பட பல முக்கிய துறைகளில் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார். கடந்த 2014ம் ஆண்டு, அவர் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியர்களின் நலனுக்காக திரு.ராம்விலாஸ் பஸ்வான் எப்போதும் குரல் கொடுத்தார்.
அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு, மத்திய அரசு சார்பிலும், நாட்டு மக்கள் சார்பிலும் மத்திய அமைச்சரவை, தனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவிக்கிறது’’
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.