காற்றாலைகள் மூலம் சுத்தமான குடிநீர், ஆக்ஸிஜன், மின்சாரம் எடுப்பதற்கான ஆலோசனை கேட்ட பிரதமர் மோடியைக் கிண்டல் செய்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு சமூக வலைதளத்தி்ல் பாஜக தலைவர்கள் சரமாரியாகப் பதில் அளித்தனர்.
காற்றாலை நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி, காணொலி மூலம் கடந்த இரு நாட்களுக்கு முன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.
அப்போது பிரதமர் மோடி, காற்றாலை நிறுவனங்களின் சிஇஓக்களிடம் ஆலோசனை கேட்டார். அதாவது, “காற்றாலை மூலம் மின்சாரம் மட்டுமின்றி, காற்றில் இருந்து சுத்தமான குடிநீர், சுத்தமான ஆக்ஸிஜனையும் பிரித்து எடுக்கும் சாத்தியங்கள் இருக்கிறதா’’ என்று கேட்டார்.
பிரதமர் மோடி கேள்வி கேட்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கிண்டல் செய்தார்.
ராகுல் காந்தி தனது பதிவில், “இந்தியாவுக்கான உண்மையான ஆபத்து என்னவென்றால், நம்முடைய பிரதமருக்குப் புரியாமல் இருப்பது அல்ல. அவரைச் சுற்றி இருப்பவர்கள் ஒருவருக்குக்கூட, அவரிடம் உண்மையைச் சொல்ல துணிச்சல் இல்லை” எனத் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் கருத்துக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் பதிலடி கொடுத்தார். அவரின் ட்விட்டர் பதிவில், “ராகுல் காந்திக்குப் புரிந்துகொள்ளும் சக்தியில்லை என்று அவரிடம் சொல்வதற்கு அவரைச் சுற்றியுள்ளவர்களுக்குத் துணிச்சல் இல்லை. உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களே மோடியின் கருத்தை ஒப்புக்கொள்ளும்போது ராகுல் காந்தி பிரதமர் மோடியைக் கிண்டல் செய்கிறார்” எனத் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், காற்றாலை மூலம் காற்றில் இருந்து சுத்தமான நீரைப் பிரித்து எடுக்க முடியும் என்று வெளியான செய்தியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் கோயல் இணைத்துள்ளார்.
பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா ட்விட்டரில் கூறுகையில், “ராகுல் ஜி, நாளை காலை நீங்கள் இரவில் எழுந்திருங்கள். இரு அறிவியல் நாளேடுகளை நான் இணைத்துள்ளேன் அதைப் படியுங்கள். இந்த விஷயத்தில் உள்ள கடினமான விஷயம் உங்களுக்குப் புரியாது என நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், காற்றாலை மூலம் நாள்தோறும் காற்றிலிருந்து ஆயிரம் லிட்டர் சுத்தமான நீரைப் பிரித்து எடுக்க முடியும் எனும் செய்தியையும் இணைத்திருந்தார்.
பாஜகவின் சமூக வலைதளப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா பதிவிட்ட கருத்தில், “ அறியாமையையும், தனக்கு சிறப்பு உரிமை இருக்கிறது என்று எண்ணுவதையும் தீர்க்க முடியாது. உலகில் உள்ள அனைவருமே அவரைப் போலவே எந்தவிதமான சிந்தனையும் இல்லாதவர்கள் என ராகுல் நினைக்கிறார். பிரதமர் மோடியின் சிந்தனைகளை உலக நிறுவனங்கள் புகழந்த நிலையில், பிரதமரின் சிந்தனைகளை ராகுல் காந்தி கிண்டல் செய்கிறார். ராகுல் பதிவிட்ட வீடியோவின் கடைசிக் காட்சியைப் பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.