மத்திய அரசின் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் (ஏஎஸ்ஐ) முதுநிலைப் பட்டயப் படிப்பில் (பி.ஜி.டிப்ளமோ) தமிழ் படித்தவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெல்லியின் அருகிலுள்ள நொய்டாவில் ஏஎஸ்ஐயின் பண்டித தீனதயாள் உபாத்யா கல்வி நிறுவனத்தில் 2 வருட முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. சமீபத்தில் அதற்கான அறிவிப்பு வெளியானது.
அதில், இக்கல்விக்கான தகுதியாக வரலாறு, தொல்லியல், மானுடவியல் ஆகிய துறைகளில் முதுநிலை எம்.ஏ. முடித்திருக்க வேண்டும். செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்ற சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபு அல்லது பெர்ஷியன் மற்றும் மண்ணியல் ஆகிய துறைகளில் எம்.ஏ. முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், செம்மொழிப் பட்டியலில் இடம்பெறும் மொழிகள் எனக் கூறிவிட்டு அதில், தமிழ் மொழித் துறைகளில் பயின்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இப்பிரச்சனையை மதுரை தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன் முதன்முறையாக எழுப்பியிருந்தார். இது தொடர்பான செய்தி ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திலும் வெளியாகி இருந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அப்பிரச்சினையைக் குறிப்பிட்டுக் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சரத்குமார் மற்றும் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டனர்.
இப்பிரச்சினை குறித்துத் தமிழக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரான பாண்டியராஜனும், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேலிடம் தொலைபேசியில் பேசியிருந்தார். இதையடுத்து, அனைத்துத் தமிழர்களின் குரலுக்கும் மத்திய அரசு உடனடியாக செவிசாய்த்துள்ளது.
ஏஎஸ்ஐ வெளியிட்ட விளம்பரத்தின் திருத்தமாக நேற்று மாலை ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ‘செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்ற தமிழ், சம்ஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மற்றும் பாலி, பிராகிருதம், அரபி அல்லது பாரசீகம் (பெர்ஷியன்) உள்ளிட்ட’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறும்போது, ''இந்த விளம்பரத்தில் செம்மொழி எனக் குறிப்பிட்ட பிறகும் அதில் சம்ஸ்கிருதத்தை மட்டும் இடம்பெறச்செய்த அநீதியை எதிர்த்துத் தமிழகமே குரல் கொடுத்தது. இப்பிரச்சினையில் தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்து மத்திய அரசு மறுஅறிவிப்பு செய்திருப்பதைப் போல், இந்தியப் பண்பாட்டின் தோற்றத்தையும், பரிமாணத்தையும் ஆய்வுசெய்யும் அறிஞர் குழுவையும் மாற்றி அமைக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
2020-21 முதல் 2021-22 ஆகிய கல்வியாண்டுகளுக்கான இந்த முதுநிலைப் பட்டயப்படிப்பு மொத்தம் 15 மாணவர்களுக்கானது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகையாக அளிக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி நவம்பர் 8, 2020.
இதற்கான நேர்முகத் தேர்வு நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தப் படிப்பை முடிப்போர் ஏஎஸ்ஐயின் அலுவலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களாகப் பணியாற்றலாம்.
ஏஎஸ்ஐயின் விளம்பரத்தில் இடம்பெறாத தமிழுக்காக வெளியான ஆதரவுக் குரலால் செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்ற மற்ற மொழிகளுக்கும் பலன் கிடைத்துள்ளன. இப்பட்டயப் படிப்பில் முதன்முறையாகக் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகியவையும் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.