திரிபுராவில் பாஜக மகளிர் அணியுடனான ஆலோசனைக் கூட்டம் அகர்தலாவில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முதல்வர் பிப்லப் குமார் தேவ் பேசியதாவது:
திரிபுராவில் பல ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வந்தது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், இடதுசாரிகள் அனைவரும் தங்கள் வீடுகளில் லெனின், ஸ்டாலின், ஜோதி பாசு உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களின் புகைப்படங்களை வைத்திருப்பார்கள்.
ஆனால், பாஜகவினர் யாரேனும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் வீடுகளில் விவேகானந்தரின் புகைப்படங்களை வைத்திருந்தீர்களா? கிடையாது. இதுவே இடதுசாரிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே உள்ள வித்தியாசம். எனவே, பாஜக மகளிர் அணியினர் திரிபுராவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் விவேகானந்தரின் புகைப்படங்களையும், அவரது வாசகங்களையும் வழங்க வேண்டும். இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், அனைத்து வீடுகளிலும் விவேகானந்தரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், இன்னும் 35 ஆண்டுகளுக்கு திரிபுராவில் பாஜகவே ஆட்சியில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.