இந்தியா

திருப்பதியில் 16-ம் தேதி தொடங்க உள்ள நவராத்திரி பிரம்மோற்சவத்தில் டிக்கெட் இருந்தால்தான் அனுமதி

என். மகேஷ்குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16-ம் தேதி முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கப்பட உள்ளது. இதில், தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே மாட வீதிகளில் நடைபெறவுள்ள உற்சவத்தை காண அனுமதிக்கப்பட உள்ளனர்.

கரோனா பரவலை தடுக்கும் விதத்தில் கடந்த மாதம் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவ விழா, கோயிலுக்குள் ஏகாந்தமாக நடைபெற்றது. வாகன சேவை நடத்தப் படவில்லை. தேர் திருவிழா முற்றி லுமாக ரத்து செய்யப்பட்டது.

நிறைவு நாளில் நடத்தப்பட்ட சக்கர ஸ்நானம் கூட கோயிலுக்குள் நடத்தப்பட்டது. இதனால் பிரம் மோற்சவத்தை பக்தர்கள் யாரும் காண முடியவில்லை.

இந்நிலையில், வரும் 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழாநடத்தப்பட உள்ளது. இதில் வாகன சேவை நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இதில் சுவாமி தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் மட்டுமே மாடவீதியில் நடைபெறும் வாகனசேவையை காண அனுமதிக்கப் படுவர்.

இந்த நவராத்திரி பிரம்மோற்சவ விழாவுக்காக வரும் 15-ம் தேதி கோயிலில் அங்குரார்பண நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

புதிய அதிகாரி ஜவஹர் ரெட்டி

திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வந்த அனில்குமார் சிங்கால், ஆந்திர மாநிலமருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையின் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இவருக்கு பதில், ஆந்திர மாநில மருத்துவம் மற்றும் சுகாதார துறையின் சிறப்பு செயலாளராக பணியாற்றி வந்த மூத்தஐஏஎஸ் அதிகாரி ஜவஹர் ரெட்டி, தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் 10-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.

SCROLL FOR NEXT