ஆப்கானிஸ்தானில் அமைதி நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று ஆப்கன் அமைதி தூதர் அப்துல்லா அப்துல்லாவிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான கவுன்சிலின் தலைவரும் நல்லிணக்கத் தூதுவருமான அப்துல்லா அப்துல்லா 5 நாள் பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தார். ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை கோரி அவர் இங்கு வந்துள்ளார். அவர் பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, மோடியிடம் ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் கத்தார் தலைநகர் தோஹாவில் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
பின்னர், அப்துல்லா அப்துல்லா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்தும் அமைதி நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடியும் நானும் ஆலோசனை நடத்தினோ ம். ஆப்கனில் அமைதி திரும்ப எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.
இந்தியாவின் ஆதரவுக்கும் வரவேற்புக்கும் பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார். மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அப்துல்லா அப்துல்லா இன்று சந்தித்து பேசுகிறார்.