கோப்புப்படம் 
இந்தியா

ஹாத்ரஸ் பலாத்காரக் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

பிடிஐ

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணக்கு மாற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிட்டிசன் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் தொண்டு நிறுவனம் மனுத்தாக்கல் செய்துள்ளது.

ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அவரின் உடலுக்கு பெற்றோர் இறுதிச்சடங்குகூட செய்யவிடாமல் போலீஸார் வலுக்கட்டாயமாக பெட்ரோல் ஊற்றித் தகனம் செய்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாகி பல்வேறு மாநிலங்களி்ல் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உ.பி. அரசு உத்தரவிட்ட நிலையில், சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், ஹாத்ரஸ் பலாத்காரக் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி ஏற்கெனவே பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இப்போது சிட்டிசன் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் எனும் தொண்டு நிறுவனமும் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், “பாலியல் பலாத்காரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ பல்வேறு சம்பவங்களில் நாங்கள் பணியாற்றியிருக்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்கள் மறைமுக அரசால் மிரட்டப்பட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. சாட்சியங்களுக்குப் பாதுகாப்பு, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் பாதுகாப்பு, உண்மை கண்டறியும் சோதனை, அதிகாரிகள் வாக்குமூலம், பாதிக்கப்பட்ட பெண்ணின் இறுதி வாக்குமூலம், தடய அறிவியல் சோதனை, மருத்துவ ஆதாரங்கள் ஆகியவை குறித்த அச்சம் எழுகிறது.

ஆதலால், இந்த வழக்கை நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.

மூத்த போலீஸ் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் சிலர் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்து உண்மைகளைக் கூறவிடாமல் திரைமறைவுப் பணியில் ஈடுபடுகிறார்கள் எனச் செய்திகள் வருகின்றன. ஆதலால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT