டி.கே.ரவியுடன் குஷூமா | கோப்புப் படம். 
இந்தியா

கர்நாடக இடைத்தேர்தலில் டி.கே.ரவியின் மனைவி காங்கிரஸ் சார்பில் போட்டி

இரா.வினோத்

கர்நாடக இடைத் தேர்தலில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவியின் மனைவி குஷூமா, ராஜராஜேஷ்வரி நகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக விளங்கிய‌ டி.கே.ரவி ‌கடந்த 2015-ம் ஆண்டு பெங்களூருவில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவரின் மனைவி, கணவர் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வந்தார். இந்நிலையில் குஷூமா கடந்த 9-ம் தேதி தன் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹனுமந்த்ராயப்பாவின் முன்னிலையில் அதிகாரபூர்வமாக காங்கிரஸில் இணைந்தார்.

அவரைக் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வரா ஆகியோர் வரவேற்றனர். அப்போது குஷூமா நவம்பர் 3-ம் தேதி நடக்கும் இடைத்தேர்தலில் ராஜராஜேஷ்வரி நகரில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு விருப்ப மனுவும் அளித்தார்.

இந்நிலையில் இன்று டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இடைத்தேர்தலில் ராஜராஜேஷ்வரி நகர் தொகுதியில் குஷூமாவும், சிரா தொகுதியில் முன்னாள் அமைச்சர் டி.பி.ஜெயசந்திராவும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார்கள்.

நன்கு படித்தவரான குஷூமாவுக்கு இளைஞர்கள், பெண்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. அந்தத் தொகுதியில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருப்பதால் எளிதில் வெற்றி பெறுவார்.

அதேபோல சிரா தொகுதியில் மூத்த தலைவர் டி.பி.ஜெயச்சந்திரா ஏற்கெனவே பலமுறை வெற்றி பெற்றிருக்கிறார். எனவே அங்கு எளிதில் வெற்றி பெற்றுவிடுவார். பாஜகவும், மஜதவும் 2 தொகுதிகளிலும் தோல்வி அடையும்'' என்றார்.

இதனிடையே அரசியல் விமர்சகர்கள், ''ராஜராஜேஷ்வரி நகர் தொகுதியில் ஒக்கலிகா சாதியைச் சேர்ந்த வாக்காள‌ர்கள் கணிசமாக இருக்கின்றனர். அந்த வாக்கு வங்கியைக் குறிவைத்து, அதே சாதியைச் சேர்ந்த‌ குஷூமாவைக் காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. இதனால் மஜதவுக்குச் செல்லும் ஒக்கலிகா வாக்குகள் குஷூமாவுக்கு விழும். அதன் மூலம் எளிதில் வென்றுவிடலாம் என டி.கே.சிவகுமார் நினைக்கிறார். அதனாலேயே குஷூமாவை அரசியலுக்கு அழைத்து வந்து தேர்தலில் நிற்க வைத்திருக்கிறார்'' எனத் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT