இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளான ‘ஆஸ்ட்ரோசாட்' வரும் 28-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
இத்துடன் அமெரிக்கா, கனடா, இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த 6 நானோ செயற்கைக் கோள்களும் செலுத்தப் படுவதால், ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் தகவல்தொடர்பு துறைக்கு உதவும் ஜிசாட் -6 செயற்கைக் கோள் ஜிஎஸ்எல்வி டி-6 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக் கோளான ‘ஆஸ்ட்ரோசாட்' பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இத்துடன் இந்தோனேசியா,கனடா மற்றும் அமெரிக்காவின் 4 நானோ செயற்கைக் கோள்கள் உட்பட 6 செயற்கைக் கோள்கள் வருகிற 28-ம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகின்றன.
விண்வெளியை ஆய்வு செய்யும் ஆஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள் 1.5 டன் எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள் 4 எக்ஸ்-ரே ஆய்வுக் கருவிகள், 1 டெலஸ்கோப், 1 கண்காணிப்பு கருவி ஆகியவற்றை கொண்டு செல்கிறது. ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் பூமத்திய ரேகையில் இருந்து 650 கிமீ தொலைவில் விண்வெளிக்கோள் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும். அங்கு புற ஊதா கதிர்கள் மற்றும் எக்ஸ்-ரே கதிர் மண்டலங்கள் கொண்ட விண்வெளிப் பகுதியை முழுமையாக ஆய்வு செய்து தகவல்களை அனுப்பும்.