இந்தியா

இணையத்தில் திட்டமிட்டு அவதூறு: நடவடிக்கை எடுக்க மும்பை காவல்துறை முடிவு

ஐஏஎன்எஸ்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து கடுமையாக விமர்சிக்கப்பட்ட மும்பை காவல்துறை, தற்போது தங்களை இலக்காக்கி வேண்டுமென்றே விமர்சித்து வருபவர்களுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளது.

சைபர் செல் பிரிவு துணை ஆணையர் ராஷ்மி க்ரந்திகார் இதுகுறித்துப் பேசுகையில், "சில சமூக வலைதளக் கணக்குகளிலிருந்து, மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் பற்றியும், மும்பை காவல்துறை பற்றியும், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் அவதூறான கருத்துகள் பரப்பப்படுகின்றன.

இதில் பெரும்பாலான கணக்குகள் போலியானவை. இந்தக் கணக்குகளை வைத்திருக்கும் அனைவரின் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம். ஏற்கெனவே கடந்த மாதம், காவல்துறை ஆணையரின் ட்விட்டர் கணக்கைப் போல போலியாகக் கணக்கு ஆரம்பித்த ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது எல்லாவற்றையும் பற்றி விசாரணை நடந்து வருகிறது" என்று கூறினார்.

கிட்டத்தட்ட 80 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் போலிக் கணக்குகள் இப்படி உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இந்தியா, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மும்பை காவல்துறைக்கு எதிராகத் திட்டமிட்டு அவதூறுப் பதிவுகள் பகிரப்பட்டுள்ளன என்று சைபர் க்ரைம் போலீஸின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மும்பை காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்து காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சியின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த், "மகாராஷ்டிர அரசின் மீது அவதூறு ஏற்படுத்த இது பாஜக ஐடி குழுவின் திட்டமிட்ட சதி" என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்த சாட்சிகளையும் விரைவில் வெளியிடுவதாகக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT