உத்திரப்பிரதேசம் தாத்ரியில் பசு மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக அக்லாக் அகமது என்பவர் அக்டோபர் 2015 இல் அடித்துக் கொல்லப்பட்டார். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான விஷால் ராணா மீது நேற்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
டெல்லிக்கு மிக அருகாமையில் 56 கி.மீ தொலைவில் உள்ள தாத்ரியின் பிஸ்ஸாரா கிராம சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தது. இதில் பக்ரீத் பண்டிகையில் பசுமாட்டை பலி கொடுத்து இறைச்சியை அக்லாக் அகமது என்பவர் தம் வீட்டில் வைத்திருந்ததாகப் புகார் எழுந்தது.
இதனால், அவரது வீட்டில் புகுந்த கிராமத்தினர் அக்லாக்கை அடித்தே கொன்றனர். உ.பியில் பாஜக ஆட்சி வந்தபின் இந்துத்துவாவாதிகள் மீது எழுந்த முதல் புகாராகக் கருதப்பட்டது.
இவ்வழக்கின் இருபது பேர் மீது வழக்கு பதிவாகி கைதாகினர். இவர்களில் முதல் குற்றவாளியாக கைதான விஷால் ராணாவும் சிறையில் தள்ளப்பட்டார்.
தற்போது ஜாமீனில் இருக்கும் விஷால் மீது நேற்று நொய்டாவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இவர், சாலையில் நடந்து சென்றபோது மீது திடீர் என அடையாளம் தெரியாத மூவர், சுட்டுத்தள்ளி விட்டு தப்பி விட்டனர்.
இதில், விஷாலின் நெஞ்சுப்பகுதியில் துப்பாக்கி குண்டு பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கிப்பட்டிருக்கிறார். இதன் மீது கவுதம்புத்நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
இதுபோல், விஷால் ராணா மீது தாத்ரி சம்பவத்திற்கு பின் தாக்குதல் நடைபெறுவது இரண்டாம் முறையாகும். இதற்கு முன் கடந்த வருடம் அவர் மீது பிஸ்ஸாரா கிராமத்தில் கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் அவர்கள் நண்பர்களுக்குள் எழுந்த மோதலினால் ஏற்பட்டதாகத் தெரிந்தது. இந்தமுறை மீண்டும் விஷால் மீது துப்பாக்கி குண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.