வன உயிரின வாரம் 2020-ஐ முன்னிட்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பொது தனியார் கூட்டு முயற்சியில் நாட்டிலுள்ள 160 உயிரியல் பூங்காக்களை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்று கூறினார்.
இதன் மூலம் மனிதர்கள், வன உயிரினங்களைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். நாட்டில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்களையும் மேம்படுத்த அரசு திட்டமிட்டிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு வரும் நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என்று அவர் கூறினார்.
உயிரியல் பூங்காக்களை மேம்படுத்தும் இந்த முயற்சியில் மாநில அரசுகள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று அவர் தெரிவித்தார். இதன்மூலம் இயற்கை மற்றும் உயிரினங்களை பாதுகாப்பது குறித்து குழந்தைகள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்று அவர் கூறினார்.
மத்திய உயிரியல் பூங்காக்கள் அமைப்பு மற்றும் டெரி நிறுவனத்தின் அறிக்கை ஒன்றையும் அமைச்சர் வெளியிட்டார்.
மேலும் உயிரியல் பூங்காக்களில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு அமைச்சர், பரனி மித்ரா விருதுகளையும் வழங்கினார். சிறந்த இயக்குனர்/ பொறுப்பாளர், கால்நடை மருத்துவர், கல்வியாளர், மற்றும் வனவிலங்கு பாதுகாவலர் ஆகிய பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின்போது பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.