ராஷ்டிரிய ஜனதா தளத்தில் (ஆர்ஜேடி) இருந்து நீக்கப்பட்ட தலித் தலைவர் பிஹாரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் லாலுவின் இருமகன்கள் மீது இன்று வழக்கு பதிவானது. இருவரும் தேர்தலுக்கு முன்பாக கைது செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.
ஆர்ஜேடியின் மாநில எஸ்சிஎஸ்டி பிரிவின் தலைவராக இருந்தவர் ஷக்தி மல்லிக். மேற்குவங்க மாநில எல்லையில் உள்ள பூர்ணியாவை சேர்ந்த இவர் நேற்று காலை தனது வீட்டில் நுழையும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
இருசக்கர வாகனத்தில் திடீர் என வந்த இருவர் மல்லிக்கை சுட்டுத்தள்ளி விட்டு தப்பி விட்டனர். இப்பிரச்சனையில் மல்லிக்கின் குடும்பத்தார் புகாரின் பேரில் வழக்குகள் பதிவாகின.
இதில் பிஹாரின் முன்னாள் துணை முதல்வரான தேஜஸ்வீ பிரசாத் யாதவ் மற்றும் முன்னாள் அமைச்சரான தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்ட ஆறு பேர் குற்றவாளிகளாக்கப்பட்டு உள்ளனர்.
இதனால், லாலுவின் மகன்களும் எந்நேரமும் கைதாகும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதன் பின்னணியில் பாட்னாவில் ஷக்தி மல்லிக் செய்தியாளர்களிடம் பேசி வைரலான வீடியோ அமைந்துள்ளது.
இதில் பேசிய ஷக்தி மல்லிக், ‘‘நான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு தேஜஸ்வீயை சந்திக்கச் சென்றேன். என்னை எஸ்சிஎஸ்டி பிரிவின் தேசிய தலைவர் அணில் சாதுஜி அழைத்துச் சென்றார்.
அப்போது தேஜஸ்வீ என்னிடம் ரூ.50 லட்சம் நன்கொடை அளித்தால் வாய்ப்பு கிடைக்கும் என நிபந்தனை விதித்தார். இதற்கு நான் யோசித்து பதிலளிப்பதாகத் தெரிவித்தேன். பிறகு அவர் எனது சமூகத்தை குறிப்பிட்டு திட்டி, உன்னை சட்டப்பேரவைக்குள் நுழைய விட மாட்டோம் எனக் கண்டித்தார்.’’ எனக் கூறுகிறார்.
இதன் பிறகு செப்டம்பர் 11 ஆர்ஜேடியில் இருந்து நீக்கப்பட்ட மல்லிக், தான் அளித்த பேட்டியால் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்காக அவருக்கு முன்னதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகார் உள்ளது.
இவ்வழக்கில் ஷக்தி மல்லிக்கின் கைப்பேசி மற்றும் வங்கிக்கணக்குகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் அனைவர் மீது ஐபிசி 120பி மோசடி வழக்கும் 302 கொலை வழக்கும் பதிவாகி உள்ளது.
இது குறித்து ‘‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஆர்ஜேடியின் செய்தித்தொடர்பாளரான மிருத்துன்ஜெய் திவாரி கூறும்போது, ‘‘அடிப்படை ஆதாரங்கள் இன்றி எங்கள் தலைவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற அவச்செயல்களில் அவர்கள் இருவரும் என்றைக்குமே ஈடுபட்டதில்லை. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவாகி உள்ளது.’’ எனத் தெரிவித்தார்.
பிஹாரில் வரும் அக்டோபர் 28 முதல் நவம்பர் 7-ம் தேதி வரை மூன்று கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், லாலு மகன்கள் மீதான இந்த கொலை வழக்கு அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.