உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சியை விரும்பாதவர்கள்தான் இனக் கலவரங்களையும், வகுப்புவாதக் கலவரங்களையும் தூண்டிவிடுகிறார்கள். எந்த மிகப்பெரிய பிரச்சினையையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
ஹாத்தரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்டார். அவரின் உடலுக்கு பெற்றோர் இறுதிச்சடங்குகூட செய்யவிடாமல் போலீஸார் வலுக்கட்டாயமாக பெட்ரோல் ஊற்றித் தகனம் செய்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாகி பல்வேறு மாநிலங்களி்ல் போராட்டம் நடந்து வருகிறது.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கடந்த வியாழக்கிழமை போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். பின்னர் சனிக்கிழமை மீண்டும் செல்ல முயன்றபோது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.
ஹாத்தரஸ் சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு காங்கிரஸ்,சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உ.பியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தக் கொலை தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையை அமைத்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்துள்ளார்.
இந்தச் சூழலில் முதல்வர் ஆதித்யநாத் ட்விட்டரில் பல்வேறு கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். அதில், “உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சியை விரும்பாதவர்கள்தான், இனவாத, வகுப்பு வாத கலவரங்களைத் தூண்டிவிடுகிறார்கள். இந்தக் கலவரத்தின் மூலம் அரசியல்ரீதியான ஆதாயங்களை, வாய்ப்புகளைப் பெற முயல்கிறார்கள். தொடர்ந்து சதி செய்து வருகிறார்கள்.
மிகப்பெரிய பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம். புதிய உத்தரப் பிரதேசத்தில் பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்சினையைத் தீர்க்கும் வழி. பெண்கள், பட்டியலினத்தவர், தாழ்த்தப்பட்டோர் விவகாரங்கள், வழக்குகளை விசாரிப்பதில் மாநில போலீஸார் ஆர்வத்துடன், சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்.
மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த தீர்க்கமாக இருக்கிறது. மாநிலத்தின் தாய்மார்களையும், சகோதரிகளையும் அவமானப்படுத்த நினைத்தால்கூட அவர்கள் முழுமையாக அழிக்கப்படுவார்கள். அவர்களுக்கு அளிக்கும் தண்டனை எதிர்காலத்தில் யாரும் தவறு செய்யாதவாறு இருக்கும். உ.பி.யில் ஒவ்வொரு தாய்க்கும், சகோதரிக்கும் பாதுகாப்பு அளிக்க உ.பி. அரசு கடமைப்பட்டுள்ளது''.
இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவி்த்தார்.