பெரும் சூறாவளிக்கிடையே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பாஜக அல்லாத எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள், மத்திய அரசு அளித்துள்ள பரிந்துரையை எதிர்க்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடுமையான வாக்குவாதங்களைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பெரும்பாலான மாநிலங்களில் அதாவது 21 மாநிலங்களில் பாஜக மற்றும் பாஜக ஆதரவு கட்சிகள் ஆட்சி புரிகின்றன. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பால் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை கரோனா காலத்தில் அளிக்க முடியாததால் மாநிலங்கள் கடன் திரட்டி அதை ஈடு செய்யலாம் என்ற பரிந்துரையை மத்திய அரசு தெரிவித்திருந்தது. செப்டம்பர் பாதி வரையிலான காலத்தில் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய இழப்பீடு ரூ.97 ஆயிரம் கோடியாகும்.
மத்திய அரசு பரிந்துரைத்த கடன் திரட்டும் முடிவை பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம், பஞ்சாப், டெல்லி, தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் எதிர்க்கும் என்று தெரிகிறது. இம்மாநில அரசுகள் மத்திய அரசின் பரிந்துரையை எதிர்த்துள்ளன. இவை கடன் பெறுவதைத் தவிர மாற்று வழியை பரிந்துரைக்குமாறு மத்திய அரசை இம்மாநிலங்கள் வலியுறுத்தும் என்று தெரிகிறது.
நடப்பு நிதிஆண்டில் மாநிலங்களுக்கு ரூ.2.35 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகைரூ.97 ஆயிரம் கோடியாகும். மேலும் கரோனா ஊரடங்கு காலத்தில் வர வேண்டிய வரி வருமான இழப்பு ரூ.1.38 லட்சம் கோடியாகும்.
மத்திய அரசு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகைக்காக இரண்டு விதமான பரிந்துரைகளை கடந்த ஆகஸ்ட் மாதம் பரிந்துரைத்திருந்தது. இதன்படி இழப்பீட்டுத் தொகையான ரூ.2.35 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கியிடம் கடனாகவோ அல்லது வெளிச்சந்தையிலோ மாநில அரசுகள் திரட்டிக் கொள்ளலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாநில அரசுகள் கடன் திரட்டும் முடிவுக்கு தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, டெல்லி, தெலங்கானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் தங்களது எதிர்ப்பை கடிதம் மூலம் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளன.
ஜிஎஸ்டி வரம்பில் 5, 12, 18 மற்றும் 28 சதவீத வரி விதிப்புகள் உள்ளன. இதில் ஆடம்பர பொருட்கள், மதுபானம், சிகரெட் உள்ளிட்டவை அதிக வரி விதிப்புக்குள்ளான பட்டியலில் இடம்பெறுகின்றன. 2019-20-ம் நிதி ஆண்டில் மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.1.65 லட்சம் கோடி தொகையை இழப்பீடாக அளித்தது. இந்த காலகட்டத்தில் செஸ் (வரி) மூலம் வசூலான தொகை ரூ.95,444 கோடியாகும்.
நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையான காலத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய இழப்பீடு ரூ.1.51 லட்சம் கோடியாகும்.