கன்னட நாடக ஆசிரியர் ஹூலி சேகர் எழுதி, இயக்கிய ‘ராக் ஷஷா' என்ற நாடகம் கர்நாடகாவில் நூற்றுக்கு மேற்பட்ட மேடை களில் அரங்கேற்றப்பட்டு பிரபல மானது. கடந்த 2011-ம் டெல்லியில் நடைபெற்ற நாடக திருவிழாவில் இந்த நாடகத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இதையடுத்து ஸ்ருஷ்டி கலாச்சார அமைப்பு ‘ராக் ஷஷா' நாடகத்தை ‘அரக்கன்' என்ற பெயரில் தமிழில் மொழிப்பெயர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள மல்லத்தஹள்ளி கலைக் கிராமத்தில் ‘அரக்கன்' நாடகம் நேற்று அரங்கேற்றம் செய்யப்பட்டது. நாடக ஆசிரியர் எஸ்.ராஜ்குமார் இயக்கிய இந்த நாடகத்தின் காட்சிகள் மதுவின் தீமை, இதனால் நாடும் வீடும் சந்திக்கும் கேடு, குடிநோயாளிகள் எதிர்க்கொள்ளும் பிரச்சினை ஆகியவற்றை தத்ரூபமாக விவரித்தது. நாடகத்தில் ‘உத்தம சாமி' கதாபாத்திரமும் 'மாயி' கதாபாத்திரமும் மதுவின் கொடுமைகளை பட்டியலிட்டன.
சோம பானத்தில் தொடங்கி மது ரசம், கள், சாராயம், விஸ்கி, ரம் என காலம் நெடுவிலும் புதுப்புது பெயர்களில் வழங்கிவரும் மது அரக்கனை சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டும். அப்போதுதான் மனிதம் மலரும் என ‘ராமு' கதாபாத்திரம் சித்தரித்தது. தற்கால சூழலில் மது பிரச்சினை சமூகத்தில் எந்த அளவுக்கு பூதாகரமாக மாறியுள்ளது என்பதனையும் வெளிப்படுத்தியதால் பார்வை யாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதுகுறித்து ஸ்ருஷ்டி கலாச்சார அமைப்பின் நிர்வாகி களில் ஒருவரான குமார், 'தி இந்து'விடம் கூறியதாவது:
இந்த நாடகத்தில் நடித்த 38 கலைஞர்களும் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர்கள். கர்நாடகாவில் கன்னட கலை ஞர்கள் தூயத் தமிழில் பேசி, நடித்த முதல் நாடகம் இதுதான். இந்த நாடகத்தை தமிழகத்திலும் அரங்கேற்றம் செய்ய திட்ட மிட்டுள்ளோம்''என்றார்