ஜிஎஸ்டி மாநில இழப்பீடுகளை அளிக்காமல் அதை வேறு பயன்களுக்கு உபயோகப்படுத்தி சட்டத்தை மீறியுள்ளதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை மத்திய பாஜக ஆட்சியை அம்பலப்படுத்தியுள்ள நிலையில் திங்களன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல்களை எழுப்பத் தயாராகி வருகின்றன.
பாஜக ஆளும் மாநிலங்கள் அல்லது பாஜகவை ஆதரிக்கும் மாநிலங்கள் உட்பட 21 மாநிலங்கள் ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்ட ரூ.97,000 கோடியை கடனாகத் திரட்டிக் கொள்ள செப்டம்பர் மத்தியில் பரிசீலித்தது. சட்டத்தை மீறி ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் தொகையை சேர்க்காமல் செஸ் வரி வசூலை வேறு நிதியில் வைத்து பிற உபயோகங்களுக்காக மத்திய அரசு மாநிலங்களுக்குச் சேர வேண்டிய தொகையைப் பயன்படுத்தியது சட்டத்தை மீறியது என்று சிஏஜி அறிக்கை கூறியுள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் முந்தைய ஜிஎஸ்டி கூட்டத்தில் அட்டர்னி ஜெனரலை மேற்கோள் காட்டி ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்று சட்டத்தில் இல்லை என்றார்.
இந்நிலையில் அக்.5ம் தேதி நாளை திங்களன்று கூடும் 42வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கு கடன் வாங்கிக் கொள்ளும் மத்திய அரசின் அறிவுறுத்தலை எதிர்க்க முடிவெடுத்துள்ளனர்.
அதாவது மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு அரசியலமைப்பு ரீதியிலான பொறுப்பு இருப்பதாக எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கருதுகின்றன.
நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ.2.35 லட்சம் ஜிஎஸ்டி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் கணக்கீட்டின் படி ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் ஏற்பட்ட இழப்பு ரூ.97,000 கோடியாகும் மீதி ரூ.1.38 லட்சம் கோடி இழப்பு கரோனா வைரஸினால் ஏற்பட்டது என்று மத்திய அரசு கருதுகிறது.
இதில் ரூ.97,000 கோடி இழப்பீட்டை மாநிலங்கள் ஆர்பிஐ உருவாக்கும் சிறப்பு சாளரம் மூலம் திரட்டிக் கொள்ளவ்ம், அல்லது2.35 லட்சம் தொகையை சந்தையிலிருந்து கடனாக வாங்கிக் கொள்ளவும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
ஆனால் பாஜக ஆட்சியல்லாத மாநிலங்களான கேரளா, மேற்கு வங்கம், டெல்லி, தெலங்கானா, சத்திஸ்கர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மத்திய அரசு பரிந்துரைகளை ஏற்கவில்லை.
ஜிஎஸ்டி வரி அமைப்பு என்பது 5, 12, 18, மற்றும் 28% என்ற அடுக்குமுறையில் உள்ளது. இதோடு ஆடம்பர பொருட்கள் மீது கூடுதல் செஸ் விதிக்கப்பட்டு இது மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புக்கு அளிக்கப்படுவதற்காக சேர்த்து வைக்கப்படும், இதுதான் வழக்கம்.
மத்திய அரசு 2019-20-ல் ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.1.65 லட்சம் கோடி அளித்துள்ளது. ஆனால் இதே காலக்கட்டத்தில் வசூலான செஸ் வரி ரூ.95, 444 கோடி மட்டுமே.
2018-19க்கு ரூ.69,275 கோடியும் 2017-18-க்கு 41,146 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய தேதியில் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடு ரூ.1.51 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்தில் கடன் ஆலோசனையை நிராகரித்து மத்திய அரசுதான் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த ஆயத்தமாகி வருகின்றன.