பெண் குழந்தைகளுக்கு கலச்சாரத்தையும், நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுப்பதால் பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியும் என உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில ஹாத்தரஸ் தலீத் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் உயர்சாதி, தாழ்ந்த சாதி பிரிவினை, தலீத் பெண்களுக்கு தொடர்ந்து நடந்து வரும் கொடூரங்கள், உத்தரப் பிரதேசத்தில் நடந்து வரும் குற்றங்கள் என்று அரசியல் ஆர்வலர்கள் முதல் சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பு ஆகியவை யோகி ஆதித்யநாத் தலைமை பாஜக ஆட்சியை காய்ச்சி எடுத்து வரும் நிலையில், பெண்பிள்ளைகளை பண்போடு வளர்க்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. பேசியுள்ளது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பல்லியா தொகுதி பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் செய்தியாளர்களை சந்தித்தபோது, “அரசாங்கம் தனது கைகளில் வாளை ஏந்தி இருந்தாலும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைக் குற்றச்செயல்களை தடுக்க முடியாது.
பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, கலாச்சாரத்தையும், சடங்குகளையும், நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுத்து வளர்ப்பதன் மூலமாகவே பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியும்.அரசும் நல்ல பண்புகளும் இணைந்தால் நாடு சிறப்பாக செயல்பட முடியும்.
ஒரு அரசு எப்படி அதன் மக்களை காக்க வேண்டுமோ அதைப்போல பெற்றோர்களும், அவர்களின் பெண் குழந்தைகளுக்கு கலாச்சாரம், நல்ல பண்புகளுடன் சேர்த்து அடக்கமாகவும் பேசவும் கற்றுக் கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.