பாஜக தேசிய பொதுச் செயலாள ராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, கர்நாடக அமைச்சர் சி.டி. ரவி தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் சி.டி.ரவி சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த வாரம் பாஜக தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அக்கட்சியின் விதிமுறைப்படி ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும். எனவே சி.டி.ரவி எந்த பதவியை தொடர்வார் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் கூறும்போது, "பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி, 75 வயதுக்கு மேல் ஓய்வு போன்ற விதிமுறைகள் உள்ளன. அதன்படி தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.டி.ரவி அப்பதவியை வகிக்கவே விரும்புவதாக கூறியுள்ளார். எனவே விரைவில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார். இம்மாத இறுதியில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ளதால், அதுவரை அவர் அந்தப் பொறுப்பை வகிப்பார் என நம்புகிறேன்" என்றார்.
இதுகுறித்து சி.டி.ரவி கூறும்போது, "அடிமட்ட தொண்டனாகஇருந்த என்னை அமைச்சர் ஆக்கியது பாஜகதான். தற்போது என்னை நம்பி மேலிடத் தலைவர்கள் தேசிய பொதுச் செயலாளராக நியமித்துள்ளனர். நான்கட்சிக்காக பணியாற்ற விரும்புவதால் எனது அமைச்சர் பதவியைராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். கட்சி மேலிடம் உத்தரவிட்டதும் ராஜினாமா கடிதத்தை முதல்வர் எடியூரப்பாவிடம் வழங்குவேன். கர்நாடகாவில் மட்டுமல்ல நாடு முழுவதும் பயணித்து கட்சி வளர்க்க பாடுபடுவேன்" என்றார்.