கர்தார்பூர் வழித்தடத்தை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்ய வில்லை என்று மத்திய அரசு தெரி வித்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது கர்தார்பூர். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தேவ், தனது இறுதிக் காலத்தை இங்குகழித்ததாக வரலாற்று ஆய்வுகள்தெரிவிக்கின்றன. இதனால், அவரது நினைவாக கர்தார்பூரில்பல நூற்றாண்டு களுக்கு முன்பு ‘தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டது.
இந்த குருத்வாராவுக்கு செல்வது என்பது சீக்கியர்களின் கடமைகளில் ஒன்றாக வரை யறுக்கப்பட்டு உள்ளது. எனினும்,பாகிஸ்தானுக்கு விசா வாங்கிச்செல்வதில் பல்வேறு சிரமங்கள்இருந்ததால் கர்தார்பூர் குருத்வாராவுக்கு இடையே வழித்தடம் அமைக்க இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே 4.7 கிலோ மீட்டர் தூரம் உள்ள கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் பணி முடிவடைந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
இதனிடையே சமீப காலமாக அதிகரித்துள்ள கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா, கர்தார்பூர் வழித்தடத்தை மூடியது. மேலும்பாகிஸ்தானும் அங்கு செல்ல தடை விதித்தது. இந்நிலையில், வரும் 29-ம் தேதி முதல் கர்தார்பூர்வழித்தடத்தை திறக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியப் பகுதியிலுள்ள இந்த வழித்தடத்தை திறப்பது தொடர்பாக இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் வஸ்தவா கூறும்போது, “கரோனா காரணமாக இந்த வழித்தடம் மூடப்பட்டுள்ளது. தற்போது பாகிஸ்தான் பகுதியில் உள்ள வழித்தடத்தை திறப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்தியப் பகுதிவழித்தடத்தை திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை. கரோனா வைரஸ் பரவலைப் பொருத்தே மீண்டும் வழித்தடத்தைத் திறப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும்.
மேலும் இந்த வழித்தடத்தில் பாகிஸ்தான் பகுதியிலுள்ள ஒரு பாலம் இன்னும் தயாராகாமல் உள்ளது. இதுதொடர்பான கூட்டம் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெற்றது” என்றார்.