‘‘பிரதமர் நரேந்திர மோடியை நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு இந்திய - அமெரிக்க நாடுகளிடையே பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்த உதவும்’’ என்று வெள்ளை மாளிகையில் உள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அயர்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வந்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்த்ஸ் கூறியதாவது:
அமெரிக்கா - இந்தியா இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்த ஆர்வமாக இருக்கிறோம். மேலும் பொருளாதார வர்த்தக உறவையும் அதிகரிக்க செய்ய தயாராக இருக்கிறோம். ஆசியாவில் மற்றும் உலக அளவில் இரு நாடுகளுக்கு இடையில் அரசியல் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்.
அமெரிக்கா வந்துள்ள பிரதமர் மோடியை வரும் திங்கள்கிழமை அதிபர் பாரக் ஒபாமா சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க செய்வதற்கு வாய்ப்பாக அமையும். கடந்த ஜனவரி மாதம் இந்திய குடியரசு தின விழாவில் அதிபர் ஒபாமா பங்கேற்றார். அப்போது மோடியை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இப்போது மீண்டும் இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஐ.நா. சபையில் அமைதி பாதுகாப்பு குறித்த மாநாட்டுக்கு அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்துள்ளார். அந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம் குறித்து ஒபாமா விரிவாக பேசுவார். பிரதமர் மோடியுடன் அதிபர் ஒபாமாவின் சந்திப்பு மிக முக்கியமான ஒன்று. ஏனெனில், பெரிய பொருளாதார நாடு, அதிக புகை வெளியிடும் நாடு என்ற வகையில் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவின் ஒத்துழைப்பை பெறுவது குறித்து அமெரிக்கா ஆலோசனை நடத்தும்.
இவ்வாறு பென் ரோட்த்ஸ் கூறினார்.
தற்போது நியூயார்க்கில் உள்ள மோடி, நாளை சிலிகான் வேலிக்கு செல்கிறார். அங்கு பேஸ்புக், கூகுள் உட்பட பிரபல தொழில்நுட்ப துறை நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.