இந்தியா

ஒடிசாவில் சாலை விபத்து 9 கபடி வீரர்கள் பலி

செய்திப்பிரிவு

ஒடிசாவில் நேற்று முன்தினம் நடந்த சாலை விபத்தில் கபடி விளையாட்டு வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

சுந்தர்கார் மாவட்டம், செந்தாபூர் என்ற கிராமத்தில் கபடி வீரர்கள், குழுவாக போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள துண்டிகாவோன் மாவட்டத்தில் சனிக்கிழமை விளையாடி விட்டு அன்று மாலை மினி லாரியில் தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சுர்தர்கார் மாவட்டம், சூரப்பள்ளி என்ற இடத்தில், இவர்கள் பயணம் செய்த மினி லாரி ஒரு பாலத்தில் கவிழ்ந்து, கீழே விழுந்தது.

இந்த விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர். 13 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT