அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வகையில் தரம் உயர்த்தப்பட்ட சவுரியா ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), ஏவுகணைத் துறையில் முழு தன்னிறைவை எட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 400 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையையும் இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணையின் முந்தையது 100 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை எட்டியிருந்த நிலையில், அது தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அணு ஆயுதங்களை ஏந்தி சென்று இலக்கை தாக்கும் சவுரியா ஏவுகணை ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது. இந்த ஏவுகணை தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட ஏவுகணையானது இலகுவாகவும் இயக்குவதற்கு எளிதாகவும் இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒடிசாவின் பாலசோர் ஏவுதளத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக எட்டியது.
ஏவுகணை கடைசி கட்டத்தில் அதன் இலக்கை நெருங்கும் போது, ஏவுகணை ஒலியை விட அதிக வேகத்தில் நகர்ந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த ஏவுகணை அதே பிரிவில் இருக்கும் ஏவுகணைகளுடன் படையில் சேர்க்கப்பட உள்ளது.