உத்தரப் பிரதேசம் ஹத்ராஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க ஊடகங்களுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அனுமதி வழங்கிட வேண்டும் என்று முதல்வர் ஆதித்யநாத்துக்கு பாஜக மூத்த தலைவர் உமா பாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் உமா பாரதி, தற்போது கரோனாவில் பாதிக்கப்பட்டு, ரிஷிகேஷ் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹத்ராஸில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வியாழக்கிழமை செல்ல முயன்றபோது அவர்களுக்கு போலீஸார் அனுமதி மறுத்துக் கைது செய்தனர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி. ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் குழுவினர் நேற்று ஹத்ராஸ் செல்ல முயன்றபோதும் அவர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை.
மேலும், ஊடகங்களும் பாதி்க்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து உண்மை நிலவரங்களை அறிய முயன்றதற்கும் போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர். இது பெரும் சர்ச்சையாகி வருகிறது.
இந்தச் சூழலில் பாஜக மூத்த தலைவர் உமா பாரதி தனதுட்விட்டரில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வேண்டுகோள் விடுத்து கருத்துப் பதிவிட்டுள்ளார்.
அதில், ''உ.பி.ஹத்ராஸில் நடந்த சம்பவங்களைப் பார்த்தபோது முதலில் நான் இந்த விஷயங்களைப் பற்றிப் பேசுவதற்குத் தயக்கமாக இருந்தது. ஆனால், ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்தபின் என்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு இப்போது பேசுகிறேன்.
ஆதித்யநாத் உங்களின் கரங்கள் சுத்தமானவை, கறைபடியாதவர். அதனால்தான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க உடனுக்குடன் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தீர்கள். ஆனால், சிறப்பு விசாரணைக் குழு அமைத்துவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சுற்றி போலீஸார் நின்றுகொண்டு யாரையும் சந்திக்கவிடாமல் மறுப்பது, விசாரணையின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும். குற்றத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது அவசியம்.
பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண் தாழ்த்தப்பட்ட குடும்பத்தாரின் மகள். அவர் இறந்தபின், அவரின் இறுதிச்சடங்கு கூட வெறுப்புடன் நடத்தப்பட்டுள்ளது. இப்போது அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறார்கள்.
நாம் அயோத்தியில் சமீபத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு பூமி பூஜை செய்தோம். ராம ராஜ்ஜியத்தைக் கொண்டுவர நாம் பணியாற்றி வருகிறோம். ஹத்ராஸில் நடக்கும் இதுபோன்ற செயல்கள் பாஜகவுக்கும், உ.பி. மாநில அரசுக்கும் அவப்பெயரை உண்டாக்கும்.
ஆதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கிடுங்கள்'' என்று உமா பாரதி தெரிவித்துள்ளார்.