இந்தியா

புதிய விவசாயச் சட்டங்களை மகாத்மா காந்தி கொண்டாடியிருப்பார்: பாஜக மத்திய அமைச்சர் கருத்து

ஏஎன்ஐ

புதிய விவசாயச் சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானது, குறைந்தபட்ச ஆதாரவிலை முறையையும் மண்டி முறையையும் படிப்படியாக ஒழித்து விடும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புக் குரல்களை எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் இந்த விவசாயச் சட்டங்களை மகாத்மா காந்தி இருந்திருந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருப்பார் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

வேளாண்மையும், கிராமப்புற வளர்ச்சியும் வளமையும் ‘காந்தி’யின் இதயத்துக்கு நெருக்கமானவை என்று ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

காந்தி ஜெயந்தியான நேற்று புதுடெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஜிதேந்திர சிங் பேசும்போது, “மகாத்மா காந்தி மட்டும் இன்று நம்மிடையே இருந்திருந்தால் புதிய விவசாயச்சட்டங்களை வரவேற்று மகிழ்ச்சியடைந்திருப்பார், கொண்டாடியிருப்பார்.

வேளாண்மையும் கிராமப்புற வளமையும் காந்தியின் இதயத்துக்கு நெருக்கமானது. வேப்பிலைச் சத்து உள்ள யூரியா, மண் ஆரோக்கிய அட்டை, விவசாய கடன் அட்டை, பிரதமர் கிசான் சம்மான் நிதி, ஃபாஸல் பீமா யோஜனா, ஆகியவை பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் ‘வேளாண்மையை ஜனநாயகப்படுத்தும் நடைமுறை’ ஆகும்.

இந்தச் சட்டங்கள் முதல்முறையாக விவசாயிக்கு தங்கள் விருப்பத் தெரிவை வழங்குகிறது.

உலகச் சந்தையில் இந்தியா போட்டியில் இறங்க இந்த வேளாண் சட்டங்கள் வளம் சேர்ப்பதோடு, விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும்” என்றார் ஜிதேந்திர சிங்.

SCROLL FOR NEXT