உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா : கோப்புப்படம் 
இந்தியா

உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்குக் கரோனா தொற்று

பிடிஐ

உத்தரப் பிரதேச மாநிலத் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை ட்விட்டரில் அவரே பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. தொடர்ந்து புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 லட்சத்தைக் கடந்துள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கரோனாவில் அரசியல் கட்சித் தலைவர்களும், உயர் அதிகாரிகளும் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உ.பி. மாநில பாஜக தலைவர் ஸ்வந்திரநாத் தேவ் சிங், உ.பி. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜல்பிரதாப் சிங் என ஏராளமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தனர்.

இதில் உத்தரப் பிரதேசத்தின் கேபினட் அமைச்சராக இருந்த கமல் ராணி வருண், சேத்தன் சவுகான் இருவரும் கரோனாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தனர். இந்நிலையில், உ.பி. மாநிலத் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நான் கரோனா பரிசோதனை செய்து கொண்டதில் எனக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதலால், என்னுடன் கடந்த சில நாட்களாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை செய்யக் கேட்டுக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் மவுரியா, பொதுப்பணித்துறை பொறுப்பை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT