இந்தியா

நாடாளுமன்ற புதிய கட்டிடப் பணிகள் அடுத்த 22 மாதங்களில் நிறைவடையும்

செய்திப்பிரிவு

நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டிடப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்தப் பணிகள் 22 மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான டெண்டர் டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு அண்மையில் வழங்கப்பட்டது. இந்தக் கட்டிடம் முக்கோண வடிவில் கட்டப்படவுள்ளது. தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கேற்ப சுமார் 1,400 பேர் வரை அமரும் வகையில் புதிய கட்டிடம் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய பொதுப்பணித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "நாடாளுமன்ற புதிய கட்டடத்துக்கான பணிகள் தொடங்கிவிட்டன. அடுத்த 22 மாதங்களில் பணிகள் நிறைவடையும்.

புதிய கட்டிடம் கட்டும் பகுதியில் இருந்த மத்திய பொதுப்பணித் துறை அலுவலகம், மின் விநியோக மையம் ஆகியவை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. தற்போது அங்கு அஸ்திவாரம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கட்டடத்துக்கு சென்ட்ரல் விஸ்டா என்று பெயரிடப்படவுள்ளது.

கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை நாடாளுமன்றம் பழைய கட்டிடத்திலேயே செயல்படும். கட்டி முடிக்கப்பட்ட பின்னர் பழைய கட்டிடம் வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT