இந்தியா

பிஹார் சட்டப்பேரவை தேர்தல்: அயோத்தியின் ராமர் கோயில் நிலம், பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்புகளால் பாஜக பலன் அடையுமா?

ஆர்.ஷபிமுன்னா

அயோத்தியின் ராமர் கோயில் நிலம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு ஆகிய இரண்டு வழக்குகளின் தீர்ப்புகளால் பாஜக பலன் அடையுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிஹார் சட்டப்பேரவை மற்றும் மாநில இடைத்தேர்தல்களில் பாஜகவிற்கு பலன் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.

உத்திரப்பிரதேசம் அயோத்தியில் நிலவிய ராமர் கோயில் பிரச்சனையை கையில் எடுத்து வளர்ந்த கட்சியாக பாஜக கருதப்படுகிறது. இக்கட்சியில் அப்பிரச்சனை எழுப்பப்பட்டது முதல் அதன் ஒவ்வொரு மக்களவை தேர்தல் அறிக்கைகளிலும் ராமர் கோயில் கட்டுவது தவறாமல் இடம்பெற்று வந்தது.

கடந்த டிசம்பர் 6, 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் பாஜகவிற்கு மீண்டும் உ.பி.யில் ஆட்சி அமரும் வாய்ப்பு கிடைத்தது. இதன் பலன் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் பாஜகவிற்கு கிடைத்தது.

இத்துடன் தனது தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி எனும் கூட்டணியை பாஜக அமைத்தது. இதன் சார்பில் அதற்கு மத்தியிலும் ஆட்சி அமைக்க வாய்ப்புகள் கிடைத்தும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்குகளையும் பாஜக ராமர் கோயில் கட்டத் தடையாகக் காரணம் காட்டி வந்தது. இச்சூழலில் மீண்டும் அக்கட்சி தலைமையில் மத்தியில் அமைந்த ஆட்சியில் பாஜகவிற்கு தனிமெஜாரிட்டி கிடைத்துள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் கடந்த வருடம் நவம்பர் 9 இல் வெளியான தீர்ப்பும் ராமர் கோயிலுக்கு சாதகமானது. இதனால், அயோத்தியில் ராமர் கோயிலுக்கானப் பணிகளும் துவங்கி விட்டன.

இருதினங்களுக்கு முன் வெளியான பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பினாலும் பாஜக பலன் அடையும் எனக் கருதப்படுகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டது ஒருபுறம் இருப்பினும், அதன் வரலாறு மீண்டும் நினைவுகூரப்படுகிறது.

இது மூன்றுகட்டமாக நடைபெறவிருக்கும் பிஹார் சட்டப்பேரவை மற்றும் பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தலில் அதிக பலன் தரும் வாய்ப்புகள் தெரிகின்றன.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ’28 வருடங்களுக்கு முன் நடைபெற்ற சம்பவத்தை இன்றைய புதிய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பினால் அதன் சட்ட நடவடிக்கைகள் மீண்டும் எழுந்து அதன் பலன் எங்களுக்கு தேர்தலில் கிடைக்கும். ஏனெனில், இந்த வழக்கின் பெரும்பாலான முக்கியக் குற்றவாளிகள் எங்கள் மூத்த தலைவர்கள். மற்றவர்களான கரசேவகர்களும், சாதுக்களும் எங்கள் கட்சிக்கு சாதகமானவர்களே.’ எனத் தெரிவித்தனர்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பிற்கு பின் பாஜகவிற்கு பிஹாரில் 1995 சட்டப்பேரவை தேர்தலில் 41 தொகுதிகள் கிடைத்தன. இது, பாஜகவிற்கு அம்மாநிலத்தில் இதுவரை கிடைக்காத அதிக எண்ணிக்கை.

பிறகு 2000 இல் 67, 2005 இல் 55, 2010 இல் 91, 2015 இல் 53 தொகுதிகள் பாஜகவிற்கு கிடைத்தன. இந்த எண்ணிக்கை தற்போது நடைபெறவிருக்கும் பிஹார் தேர்தலில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இருவழக்குகளின் தீர்ப்பின் பலன் மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல்களிலும் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கானப் பிரச்சாரங்களை அதில் பாஜகவும் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அயோத்தியில் ராமர் கோயிலுக்கானப் பணிகளும் துவங்கி நடைபெற்று வருகின்றன. இதை உ.பி.யின் அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக கட்டி முடித்து.அதன் பலனை பெறவும் பாஜக தீவிரம் காட்டு வருகிறது.

SCROLL FOR NEXT