உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போலீஸாரால் கீழே தள்ளப்பட்டதற்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் பட்டியல் வகுப்புப் பிரிவு சார்பில் நேற்று மாநில தழுவிய அளவில் போராட்டம் நடத்தபட்டது. அப்போது உத்தரப் பிரதேச முதல்வர் பதவியில் இருந்து யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என முழக்கம் எழுப்பினர்.
இந்நிலையில் நேற்று மாலை உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தி போலீஸாரால் கீழே தள்ளப்பட்டதைக் கண்டித்து பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூருவில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறும்போது, ''ராகுல் காந்தியின் பொறுப்புக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட உத்தரப்பிரதேச அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். போராடும் தலைவர்களையும், மக்களையும் தாக்கியதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் உரிய தண்டனையை அனுபவிப்பார். பாஜகவின் இந்த அராஜகப் போக்கிற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்'' என்றார்.
முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான தேவகவுடா கூறுகையில், ''உத்தரப் பிரதேச அரசு, பெரும் அரசியல் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை மிகுந்த கவனத்தோடும், அக்கறையோடும் நடத்தி இருக்க வேண்டும். அவர்கள் நியாயமான கோரிக்கைக்காகப் போராடுகிறார்கள். போராட்டம் நடத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை. எனவே ராகுல் காந்தியையும், பிரியங்கா காந்தியையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். போலீஸார் ராகுல் காந்தியை நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது'' எனத் தெரிவித்தார்.