ராகுல் காந்தி நேற்று ஹத்ராஸ் செல்ல முயன்றபோது போலீஸார் தடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்ட காட்சி : படம் ஏஎன்ஐ 
இந்தியா

ஹத்ராஸ் பலாத்காரக் கொலை: ராகுல், பிரியங்கா காந்தி மீது 3 பிரிவுகளில் நொய்டாவில் முதல்தகவல் அறிக்கை பதிவு

பிடிஐ


உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்தினரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங் காந்தி சந்திக்கச் சென்றபோது போலீஸார் தடுத்ததில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொற்றுநோய் தடுப்புச்சட்டத்தின் கீழ் சமூக விலகலைக் கடைபிடிக்கவில்லை, முக்ககவசம் அணியவில்லை உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீஸார் முதல்தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீஸார், புதன்கிழமை அதிகாலை தகனம் செய்தனர்.

இந்நிலையி்ல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் முடிவு செய்து நேற்று ஹத்ராஸ் சென்றனர்.

ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், மாவட்ட எல்லைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி சென்ற காரை மாவட்ட அதிகாரிகள், போலீஸார் மறித்தனர்.

அதிகாரிகளுடன் ராகுல், பிரியங்கா, காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடக்கத் தொடங்கினர். ராகுல் காந்தியை தொடர்ந்து நடக்காத வகையில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டதால், போலீஸார் ராகுல் காந்தியை தள்ளிவிட்டனர். இதில் ராகுல் காந்தி கீழே விழுந்தார். அதன்பின் ராகுல், பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு போலீஸார் அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா, உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் 200 பேர் மீது நொய்டா போலீஸார் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கவுதம்புத்தா நகர் போலீஸார் விடுத்த அறிவிப்பில் “ ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, உள்பட 200 காங்கிரஸ் தொண்டர்கள் மீது, இந்திய குற்றவியல் சட்டம் 188(அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்தல்), பிரிவு 269(மற்றவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகும் வகையில் நோயை பரப்புதல்), பிரிவு 270 ஆகியவற்றின் கீழ் போலீஸார் முதல்தகவல் அறிக்கையை செய்துள்ளனர்.

போலீஸாருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளுவில் சில பெண் போலீஸார் காயமடைந்தனர். பெண் காவல் துணை ஆய்வாளர் ஒருவரின் சீருடை கிழிக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT