இந்தியா

பிஹாரில் முஸ்லிம் கட்சிகளின் போட்டியால் லாலு தலைமையிலான மெகா கூட்டணிக்கு சிக்கல்

ஆர்.ஷபிமுன்னா

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஹைதராபாத் எம்.பி.யான அசாதுதீன் ஒவைஸியின் அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தாஹதுல் முஸ்லிமின் கட்சி (ஏஐஎம்ஐஎம்) 50 தொகுதிகளிலும், அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி 13 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. முஸ்லிம் கட்சிகளின் போட்டியால்லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான மெகா கூட்டணிக்கு சிக்கல் உருவாகி உள்ளது.

கடந்த 2015-ல் நடந்த பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் லாலு தலைமையிலான மெகா கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய இரண்டிற்கும் இடையில் முக்கியப் போட்டி இருந்தது. சிறிய கட்சிகள் அனைத்தும் இவ்விரண்டு கூட்டணிகளுடனும் இணைந்து விட்டன. ஏஐஎம்ஐஎம் மற்றும் இடதுசாரிகள் மட்டும் தனித்து போட்டியிட்டன. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் லாலு கூட்டணியில் இருந்தமையால் மெகா கூட்டணிக்கு வெற்றி எளிதானது.

ஆனால், இந்தமுறை அவ்வாறு இல்லாமல், நிதிஷ் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்து விட்டார். இத்துடன் ஏஐஎம்ஐஎம், ஐஎம்எல் ஆகிய முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்டவை பிஹார் சட்டப்பேரவை தேர்தல் களத்தில் குதித்துள்ளன. இதுமட்டுமின்றி, உத்தரபிரதேசத்தின் தலித் ஆதரவு தலைவரான சந்திரசேகர் ஆஸாத்தின் கட்சி, பிஹாரின் முன்னாள் எம்.பி.யான பப்பு யாதவின் ஜன் அதிகார் கட்சியுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகிறது. எதிர்க்கட்சிகள் பட்டியலில் இடம்பெற்ற இவர்களால், லாலுவின் மெகா கூட்டணிக்கு சிக்கல் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

இவர்களில் ஏஐஎம்ஐஎம் கட்சி கடந்த முறை முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் போட்டியிட்டு கிஷ்ணகஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளரை தோற்கடித்து ஒரு தொகுதியில் வென்றது. மற்ற தொகுதிகளில், அக்கட்சி மெகா கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய முஸ்லிம் வாக்குகளை பிரித்திருந்தது. இந்தமுறை அதனுடன் ஐஎம்எல் கட்சியும் போட்டியிடுவதால் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் முஸ்லிம் வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் உள்ளன.

பிஹாரில் சுமார் 17 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். இதனால் முஸ்லிம்களுடன் 14 சதவீதம் உள்ள யாதவர்களின் பெரும்பாலான வாக்குகளும் லாலுவுக்கு நிரந்தரமாகக் கிடைத்து வந்தன. இந்த முறை, முஸ்லிம் வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டு, லாலுவின் மெகா கூட்டணிக்கு சிக்கல் உருவாகி உள்ளது. இச்சூழலில் அக்டோபர் 28-ல் நடைபெறும் பிஹாரின் முதல்கட்ட தேர்தலுக்கான 71 தொகுதிகளுக்கு நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி விட்டன. மற்ற இருகட்ட தேர்தல்களுக்கான தொகுதி பங்கீடுகளை, மெகா கூட்டணியை போல ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் இன்னும் முடிவு செய்யாமல் உள்ளன. இங்கு மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கும் 3 கட்டமாக தேர்தல் நடக்கிறது. நவம்பர் 10-ல் முடிவுகள் வெளியாக உள்ளன.

SCROLL FOR NEXT