நுஸ்ரத் ஜஹான் 
இந்தியா

துர்க்கை அம்மன் போல வேடம்: நடிகையும் திரிணமூல் எம்.பி.யுமான நுஸ்ரத் ஜஹானுக்கு கொலை மிரட்டல்

செய்திப்பிரிவு

துர்க்கை அம்மன் போல வேடமிட்டு புகைப்படத்தை வெளியிட்டதற்காக மத அடிப்படைவாதிகள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக நடிகையும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான நுஸ்ரத் ஜஹான் தெரிவித்துள்ளார். இப்போது லண்டனில் இருக்கும் அவர் போலீஸ் பாதுகாப்பு கோரி இந்திய தூதரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேற்குவங்கத்தை சேர்ந்த நடிகையும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான நுஸ்ரத் ஜஹான், கடந்த மாதம் 18-ம் தேதி துர்க்கா பூஜையின் தொடக்க நாளான மகாளய தினத்தை முன்னிட்டு துர்க்கை அம்மன் போல வேடமிட்டு கையில் திரிசூலம் ஏந்தியபடி இருந்த தனது படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரான நுஸ்ரத் ஜஹான் இதுபோன்று துர்க்கை அம்மன் வேடத்தில் படத்தை வெளியிட்டதற்கு அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நுஸ்ரத் ஜஹான் இப்போது படப்பிடிப்புக்காக லண்டனில் உள்ளார். அக்டோபர் 16-ம் தேதி வரை அவர் லண்டனில் தங்க உள்ளார். இந்தியாவில் இருந்தும் அண்டை நாடுகளில் இருந்தும் சமூக ஊடகங்கள் மூலம் தனக்கு மத அடிப்படைவாதிகளால் கொலை மிரட்டல் வந்துள்ளதாகவும் அது தனது மன ஆரோக்கியத்தை பாதிப்பதாகவும் அச்சுறுத்தல் தீவிரமாக இருப்பதால் லண்டனில் தங்கியிருக்கும் வரை தனக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு நுஸ்ரத் ஜஹான் கடிதம் எழுதியுள்ளார். மேலும், தனக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மேற்கு வங்க அரசுக்கும் மத்திய அரசுக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT