தலித் பெண்ணை தகனம் செய்த இடம். 
இந்தியா

வெட்கப்படுகிறேன்! தலித் பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை எனில் பதவியை ராஜினாமா செய்வேன்: உ.பி. பாஜக எம்.பி. சூளுரை

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச மாநில ஹஸ்ரத்தைச் சேர்ந்த 19 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமையினால் மரணமடைந்த விவகாரத்தில் பெண்ணி உடலை யாருக்கும் தெரியாமல் இருட்டோடு இருட்டாக தகனம் செய்தது ஏன் என்ற கேள்வி பெரிய அளவில் எழுந்துள்ளது.

மாயாவதி, மம்தா பானர்ஜி, காங்கிரஸ், சமாஜ்வாதி என்று பல கட்சிகளும் ஒன்று திரண்டு யோகி ஆதித்யநாத் தலைமை உ.பி. அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றன.

இந்நிலையில் பாஜக எம்.பி. ராஜ்வீர் தைலர் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்ட விதம் குறித்து கேள்விகளை எழுப்பினார்.

அவர் தி பிரிண்ட் என்ற ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “நான் கடந்த 2 நாட்களாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினருடன் கிராமத்தில்தான் இருந்தேன். பெண்ணின் உடலைத் தகனம் செய்த போது மாவட்ட மேஜிஸ்ட்ரேட், போலீஸ் உயரதிகாரி உடனிருந்தனர்.

நானும் இருந்தேன், ஆனால் போலீஸ் மோதல் ஏற்பட்டு விடும் என்று என்னை அங்கிருந்து போகுமாறு அறிவுறுத்தினர்.

நான் மேஜிஸ்ட்ரேட்டிடம் இருட்டில் வேண்டாம் காலையில் இறுதிச் சடங்கு செய்யுங்கள் என்றேன். அவர் கேட்கவில்லை. போலீஸாரும் பெண் உடலை தகனம் செய்யப் போகிறோம் என்று சொல்லவில்லை.

மாவட்ட மேஜிஸ்ட்ரேட்தான் இத்தகைய தகனம் செய்ய காரணம், அவர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகியிடம் கோரிக்கை வைப்பேன்.

ஒரு எம்.பி.யாக வெட்கப்படுகிறேன்! அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லையெனி என் எம்.பி. பதவியையே துறக்கிறேன் என்று அந்தப் பெண்ணின் குடும்பத்திடம் தெரிவித்து விட்டேன்.” என்றார்.

வால்மீகி என்ற தலித் பிரிவைச் சேர்ந்த அந்தப் பெண் 14 செப்டம்பர் அன்று மேல்சாதியைச் சேர்ந்த 4 பேர் வயல்வெளிக்கு அவரை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர், அந்தப் பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தார்.

இந்நிலையில் தங்கள் பெண்ணை கடைசியாக ஒருமுறை பார்க்கக் கூட பெற்றோருக்கு வாய்ப்பளிக்காமல் மேஜிஸ்ட்ரேட், போலீஸார் உடலை தகனம் செய்தனர். தலித் பெண்ணின் வீட்டுக்கும் உடலை தகனம் செய்யும் இடத்துக்கும் இடையே 3 நீளமான தடுப்புகளைப் போட்டி போலீஸைக் குவித்திருந்தனர்.

மோகன்லால் கஞ்ச் பாஜக எம்.பி.யான கவுஷல் கிஷோர், உ.பி.போலீசின் அராஜகம் பற்றி கூறும்போது, ‘உ.பி.யில் போலீஸார் யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள், அவர்கள் ஏழைகளையும் தலித்துகளையும் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர்’ என்றார்.

கவுஷாம்பியைச் சேர்ந்த இன்னொரு பாஜக எம்.பி. விநோத் சொங்கர், “இந்தச் சம்பவம் அரசின் மீதான பிம்பத்தையே உடைத்து விட்டது. இது நம் மீதான கறை. இதனை ஒழுங்காகக்கையாளவில்லை எனில் பிஹார் தேர்தல், உ.பி.இடைத்தேர்தலில் பெரிய பாதிப்பைச் சந்திக்க வேண்டி வரும்” என்றார்.

SCROLL FOR NEXT