உத்தரப் பிரதேசம், ஹத்ராஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்படவி்ல்லை என்று உ.பி. போலீஸார் தெரிவிக்கின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த 19 வயது பட்டியலின இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீஸார், நேற்று அதிகாலை தகனம் செய்தனர்.
இந்நிலையில் கொல்லப்பட்ட ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் முடிவு செய்து இன்று ஹத்ராஸ் புறப்பட்டபோது நடுவழியில் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் உ.பி சட்டம் ஒழுங்கு ஏடிஜி பிரசாந்த் குமார் இன்று லக்னோவில் நிருபர்களிடம் கூறுகையில், “ஹத்ராஸில் கூட்டுப் பலாத்காரம் செய்து டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை.
அந்தப் பெண் குறித்த தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிக்கையில் அந்த 19 வயதுப் பெண்ணின் கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் அதிர்ச்சியால் உயிரிழந்துள்ளார். அந்தப் பெண்ணின் உடலில் எந்த ஆணின் விந்தணுக்களும் இல்லை. இதன் மூலம் அந்தப் பெண் பலாத்காரமோ அல்லது கூட்டுப் பலாத்காரமோ செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது.
அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தில்கூட தான் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளாரே தவிர பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறவில்லை. சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கவும், சாதி வன்முறையைத் தூண்டவும் சிலர் தவறான தகவல்களைப் பரப்பியுள்ளார்கள்.
இந்த வழக்கில் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்தார்கள். சமூக நல்லிணக்கத்தைக் குலைத்த, சாதி வன்முறையைத் தூண்டிவிட முயன்றவர்களை போலீஸார் கண்டுபிடிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.