படம் விளக்கம்: உ.பி.யின் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலும் அதை ஒட்டியபடி ஷாயி ஈத்கா மசூதியில் அமைந்திருப்பதை காட்டும் படம் 
இந்தியா

கிருஷ்ண ஜென்மபூமி கோயிலுக்கு அருகிலுள்ள ஷாயி ஈத்கா மசூதியை அகற்ற கோரும் மனுவை தள்ளுபடி செய்தது மதுராவின் சிவில் நீதிமன்றம்

ஆர்.ஷபிமுன்னா

உத்திரப்பிரதேசம் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமி கோயிலுக்கு அருகிலுள்ள ஷாயி ஈத்கா மசூதியை அகற்றக் கோரப்பட்டிருந்தது. இதன் மீதான மனுவை விசாரிக்க முகாந்திரம் இல்லை என காரணம் கூறி அதன் சிவில் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

உ.பி.யின் மதுரா கோயிலை கிருஷ்ணஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தானும், அதன் அருகிலுள்ள மசூதியை ஷாஹி ஈத்கா மேனேஜ்மெண்ட் கமிட்டி ஆகியவை நிர்வகித்து வருகின்றன. இவ்விரண்டின் இடையே கடந்த 1968 ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.

அதில், கோயிலும், மசூதியும் அருகருகில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் இருக்கும் என்பது முக்கியமாக இருந்தது. இந்த ஒப்பந்தத்தை, மதுரா மாவட்ட சிவில் நீதிமன்றத்தால் கடந்த ஜூலை 20, 1973 இல் ஏற்கப்பட்டு பதிவு செய்து செயல்பாட்டில் உள்ளது.

இந்த சூழலில் அந்த ஒப்பந்தம் தவறான காரணங்களுக்காக போடப்பட்டது என்றும், இதை ரத்து செய்து மசூதி அமைந்துள்ள 13.37 ஏக்கர் நிலத்தையும் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மதுரா நீதிமன்றத்தில் செப்டமர் 26 இல் மனு அளிக்கப்பட்டது.

பாஜகவின் தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத்திற்கு நெருக்கமான வழக்கறிஞர் ரஞ்சனா அக்னிஹோத்ரி சார்பில் இம்மனு தொடுக்கப்பட்டது. இவருடன் டெல்லி, லக்னோவை உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த மேலும் 4 வழக்கறிஞர்களும் மனு அளித்திருந்தனர்.

இதற்கான வரலாற்று ஆதாரமாக ஜாதுநாத் சர்கார் எழுதிய நூல் உள்ளிட்ட பலவும் சமர்ப்பித்திருந்தனர். இதில், அங்கிருந்த கிருஷ்ணன் கோயில் முகலாய மன்னன் அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்டு அதன் ஒருபகுதியில் 1669-70 ஆம் ஆண்டில் ஷாயி ஈத்கா மசூதியை கட்டியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மதுராவின் சிவில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், அம்மனு ’விசாரணை செய்ய முகாந்திரம் இல்லை’ எனக் கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கு காரணமாக மத்திய அரசால் அமலாக்கப்பட்ட ’மதவழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991’ நீதிமன்றத்தால் சுட்டிக் காட்டப்பட்டு இருந்தது. இதன்படி, ஆகஸ்ட் 15, 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இருந்த வழிப்பாட்டு தலங்கள் அனைத்தும் அதேநிலையில் நீடிக்கும் எனப்பட்டது.

வாரணாசியில் காசி விஸ்வாதநாதர் கோயிலும் அதை ஒட்டியபடி கியான்வாபி மசூதியும்

அதற்கும் முன்பாக அயோத்தியின் ராமர் கோயில்-பாபர் மசூதி வழக்கு தொடுக்கப்பட்டு நடைபெற்று வந்தமையால் இதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. ஏற்கெனவே காசியின் விஸ்வநாதர் கோயிலை ஒட்டியிருக்கும் கியான்வாபி மற்றும் மதுராவின் ஷாயி ஈத்கா ஆகிய மசூதிகள் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

இந்த பல்வேறு வகையிலான அனைத்து மனுக்களும் அவ்விரண்டு மாவட்ட நீதிமன்றங்களால் வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991 ஐ காரணம் காட்டி தள்ளுபடி செய்யப்பட்டன. எனினும், இந்த வழிபாட்டுத்தலங்கள் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கடந்த வருடம் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனு இன்னும் நிலுவையில் உள்ளது.

மதுரா கிருஷ்ண ஜென்மபூமி கோயில் வரலாற்றுச் சுருக்கம்

முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்ட கோயிலின் மீதி காலி நிலம் அரசிற்கு சொந்தமாகி இருந்தது. இது ஆங்கிலேயர் ஆட்சியில் 1815 ஆம் ஆண்டில் ஏலம் விடப்பட்ட நிலத்தை காசி எனும் பனாரஸின் ராஜா பட்னி மால் வாங்கினார்.

இந்நிலையில், மதுராவின் முஸ்லிம்களால் அந்த காலி நிலம் தமக்கானது என வழக்கு தொடுக்கப்பட்டது. இதை 1921 ஆம் ஆண்டில் மதுராவின் நீதிமன்றம் ஏற்காமல் தள்ளுபடி செய்தது.

பிறகு பிப்ரவரி 1944 ஆம் ஆண்டில் பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் நிறுவனரான பண்டிட் மதன் மோஹன் மாளவியா, கோஸ்வாமி கணேஷ் தத் மற்றும் பிக்கன் லால்ஜி அட்ரே ஆகிய மூவரும் விலைக்கு வாங்கினர். இதற்கான தொகை ரூ.19,400 ஐ தொழில் அதிபரான ஜுகல் கிஷோர் பிர்லா அளித்திருந்தார்.

இவர்கள் அனைவரும் இணைந்து மார்ச் 1951 ஆம் ஆண்டில் ஒரு அறக்கட்டளை அமைத்து அங்கு கிருஷ்ண ஜென்மபூமி கோயிலை கட்டினர். இந்த அறக்கட்டளை மற்றும் ஈத்கா மசூதி நிர்வாகம் சார்பில் 1968 இல் இடப்பட்ட ஒப்பந்தத்தை தான் ரத்து செய்யக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT